இந்தியாவிற்கு எதிராக தொடரும் ஜோ ரூட்டின் ஆதிக்கம்..!
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6வது முறையாக சதம் அடித்து தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறார்.
நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இருப்பினும் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் நங்கூரமாக களத்தில் நின்று வருகிறார். ரோரி பர்னஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் கிராவ்லி, ஜானி பார்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜாஸ் பட்லர் என்று அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து சொதப்ப தனி ஆளாக இங்கிலாந்து அணியை தனது தோளில் சுமந்து போராடி வருகிறார்.
உலகின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களில் அனைவராலும் முன்வைக்கப்படும் மூன்று வீரர்களில் விராட்கோலி, ஸ்டீவ் ஸ்மித்துடன் சரிசம பலத்துடன் திகழ்பவர் ஜோரூட். அதேபோல, டெஸ்ட் கிரிக்கெட்டின் திறமையான கேப்டன்களிலும், இந்தியாவின் விராட்கோலி, நியூசிலாந்தின் வில்லியம்சனுக்கு இணையாக உலகின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டனாக வலம் வருகிறார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க என்று உலகின் அனைத்து தலைசிறந்த டெஸ்ட் அணிகளுடனும் தனது ஆதிக்கத்தை ஜோ ரூட் நிலைநிறுத்தியுள்ளார். குறிப்பாக, ஜோ ரூட் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜோ ரூட் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 875 ரன்களை குவித்துள்ளார்.
அவற்றில் 20 சதங்களும், 5 இரட்டை சதங்களும், 51 அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ரன் 254 ஆகும். ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் 37 இன்னிங்சில் ஆடி 5 சதங்களை அடித்துள்ளார். 10 அரைசதங்களையும் இந்திய அணிக்கு எதிராக அவர் அடித்துள்ளார். மேலும், இந்திய அணிக்கு எதிராக அவர் தனது அதிகபட்ச ரன்னாக 218 ரன்களை சேர்த்துள்ளார். மொத்தத்தில் ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக மட்டும் 1,853 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் மூன்று முறை நாட் அவுட்டாகவும் திகழ்ந்துள்ளார்.
ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளில் ஆப்கானிஸ்தான் அணியைத் தவிர பிற முன்னணி அணிகள் அனைத்துடனும் விளையாடியுள்ளார். அதில், அவர் இந்தியாவிற்கு எதிராகத்தான் அதிகபட்சமாக 5 சதங்களை அடித்துள்ளார். இன்றைய இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் அவரது சத எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜோ ரூட் தனது 100வது டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிராக ஆடினார். அந்த போட்டியிலும் அவர் இரட்டை சதம் அடித்து இந்தியாவிற்கு எதிராக தனது அதிகபட்ச ரன்னான 218 ரன்களாக பதிவு செய்தார்.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் 46 இன்னிங்சில் ஆடி 1,694 ரன்களை குவித்துள்ளார். அதில், 3 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார்.
இதுதவிர, ஜோ ரூட் நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும், பாகிஸஸ்தானுக்கு எதிராக ஒரு சதத்தையும், ஒரு இரட்டை சதத்தையும், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு சதத்தையும், இலங்கைக்கு எதிராக ஒரு சதத்தையும், ஒரு இரட்டை சதத்தையும் அடித்துள்ளார். 30 வயதான ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் தனது சராசரியாக 49.03 சதவீதம் வைத்துள்ளார்.