IPL 2021 Updates : டாப் 5 சிக்ஸர்கள், டாப் 5 பவுண்டரி அடித்த வீரர்கள் யார் தெரியுமா?
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இணையாக ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற தொடர் ஐ.பி.எல், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல், தொடரில் சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும், கடைசி ஓவர்களின் விறுவிறுப்புக்கும் துளியளவும் பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டமும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே அழைத்து வரும் அளவிற்கு அமைந்துள்ளது.
ஐ.பி.எல். தொடரிலே அதிக சிக்ஸர்களையும், அதிக பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய டாப் 5 வீரர்களை பற்றி காணலாம்.
கடந்த 14 ஐ.பி.எல். தொடர்களில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பவர் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை ஐ.பி.எல். கோப்பையை பெற்றுத்தந்த கவுதம் கம்பீர். அவர் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக 154 ஐ.பி.எல், ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவர் மொத்தம் 152 இன்னிங்சில் களமிறங்கி 4 ஆயிரத்து 217 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் மொத்தம் 491 பவுண்டரிகள் அடங்கும்.
4-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக 197 ஆட்டங்களில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 192 இன்னிங்ஸ் களமிறங்கியுள்ளார். மொத்தம் 5 ஆயிரத்து 448 ரன்களை குவித்துள்ள சுரேஷ் ரெய்னா இதுவரை 498 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
3வது இடத்தில் `ரன் மெஷின்’ கிங் கோலி உள்ளார். 2008-ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, இதுவரை 196 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மொத்தம் 188 இன்னிங்சில் களமிறங்கியுள்ள கோலி 6,021 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 518 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
2வது இடத்தில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் உள்ளார். டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ள வார்னர், இதுவரை 146 போட்டிகளில் விளையாடியுள்ளார். 146 போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ள வார்னர், 5 ஆயிரத்து 384 ரன்களை அடித்துள்ளார். அவற்றில் 522 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் ஷிகர் தவான் உள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக மொத்தம் 180 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இவற்றில் மொத்தம் 179 இன்னிங்சில் களமிறங்கியுள்ள தவான் 5 ஆயிரத்து 428 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 620 பவுண்டரிகளை விளாசி 14 ஆண்டுகால ஐ.பி.எல். தொடரிலே அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். தொடரிலே அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 5வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். அவர் மொத்தம் 196 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் 188 இன்னிங்சில் களமிறங்கியுள்ள கோலி, 6 ஆயிரத்து 21 ரன்களை குவித்து 204 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
4வது இடத்தில் ரசிகர்களால் செல்லமாக `தல’ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உள்ளார். சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிக்காக இதுவரை 208 ஆட்டங்களில் தோனி விளையாடியுள்ளார். அவற்றில் 199 இன்னிங்சில் களமிறங்கியுள்ள தோனி, 4 ஆயிரத்து 667 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 217 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.
3வது இடத்தில் ஐ.பி.எல். தொடரிலே அதிக முறை கோப்பையை கைப்பற்றிய மும்பை அணியின் கேப்டனாகிய ரோகித் சர்மா உள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 204 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். அவற்றில் 199 இன்னிங்சில் களமிறங்கியுள்ள ரோகித் மொத்தம் 5 ஆயிரத்து 368 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 220 சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார்.
2வது இடத்தில் அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸ் உள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர் அணிக்காக இதுவரை 173 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். அவற்றில் 159 இன்னிங்சில் களமிறங்கியுள்ள டிவில்லியர்ஸ் 4 ஆயிரத்து 974 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 240 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 14 ஆண்டு கால வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் யாருமே நெருங்க முடியாத இடத்தில், “யுனிவர்ஸ் பாஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் உள்ளார். பஞ்சாப் அணிக்காக தற்போது விளையாடி வரும் கெயில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். மொத்தம் 136 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள கெயில் 135 இன்னிங்சில் களமிறங்கியுள்ளார். ஐ.பி.எல், தொடர்களில் இதுவரை 4 ஆயிரத்து 848 ரன்களை அவர் குவித்துள்ளார்.
2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் 352 சிக்ஸர்களை அடித்து யாருமே நெருங்க முடியாத வகையில் கிறிஸ் கெயில் ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலுமே கெயில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.