Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
IndiGo Flights: இண்டிகோ விமான நிறுவனத்தின் தினசரி சேவைகளில் 10 சதவிகிதத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

IndiGo Flights: தங்களது விமான சேவை முற்றிலும் சீரடைந்து விட்டதாக இண்டிகோ அறிவித்த நிலையில், மத்திய அரசின் உத்தரவு வெளியாகியுள்ளது.
இண்டிகோவிற்கு ஆப்படித்த அரசு
மத்திய அரசின் புதிய விதிகள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை எடுக்காததால், இண்டிகோ நிறுவனத்தின் 2,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகளை 10 சதவிகிதம் குறைக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தங்களது செயல்பாடுகள் சீரடைந்துவிட்டதாக விமான நிறுவனம் கூறிய போதிலும் இந்த முடிவு அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் தினசரி சுமார் 2,200 விமான சேவைகளை வழங்கி வரும் நிலையில், புதிய உத்தரவு காரணமாக தினமும் 200க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்படும். முந்தைய எச்சரிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நெருக்கடியை முழுமையாகத் தடுக்கத் தவறியதைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் சொல்லும் விளக்கம்:
முன்னதாக எக்ஸ் தளத்தில் வெளியான இண்டிகோ நிறுவனத்தின் அறிக்கையில், ”ஒட்டுமொத்த இண்டிகோ சேவையின் வழித்தடங்களைக் குறைப்பது அவசியம் என்று அமைச்சகம் கருதுகிறது, இது விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை உறுதிப்படுத்த உதவும் மற்றும் ரத்து செய்வதைக் குறைக்க வழிவகுக்கும். 10 சதவிகித குறைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், இண்டிகோ அதன் அனைத்து இடங்களுக்குமான சேவையை முன்பை போலவே தொடரும்" என்று தெரிவித்துள்ளது.
கட்டண வரம்புகள் மற்றும் பயணிகளின் வசதிக்கான நடவடிக்கைகள் உட்பட அனைத்து அரசாங்க உத்தரவுகளையும் விதிவிலக்கு இல்லாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.
குழப்பமும்.. அதிரடி நடவடிக்கைகளும்..
முன்னதாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோவின் சேவைகளை 5 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டது, இந்த எண்ணிக்கையை இப்போது அமைச்சகம் இரட்டிப்பாக்கியுள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதவர்களுக்கான பணம் முற்றிலுமாக திருப்பி வழங்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள நபர்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல் மற்றும்உடைமைகலை ஒப்படைப்பதை விரைவுபடுத்த கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
அமைச்சக அதிகாரிகளுடனான தனது சந்திப்பிற்கு முன்னதாக, எல்பர்ஸ் X இல் விமான நிறுவனம் "மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது" என்று கூறியிருந்தார், மேலும் இடையூறுகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
அரசாங்கம் ஏற்கனவே இண்டிகோ நிறுவனத்திற்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. சமீபத்திய ஆண்டுகளில் விமான நிறுவனம் சந்தித்த மிக மோசமான செயல்பாட்டு நெருக்கடிகளில் ஒன்றான விமானப் போக்குவரத்துத் துறையில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், அதிகரித்து வரும் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யவும் அரசாங்கம் எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டை இந்த சமீபத்திய உத்தரவு சுட்டிக்காட்டுகிறது





















