KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி கடிதம் எழுதியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அமைச்சர்கள் மீது குறிவைத்து அமலாக்கத்துறை தொடர் சோதனை மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில் முக்கிய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த நிலையில் சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தது. குறிப்பாக டாஸ்மாக், மணல் கொள்ளை மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பியது.
இந்த நிலையில் திமுக முதன்மை செயலாளரும், மூத்த அமைச்சருமான கே.என்.நேரு மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், 2,538 பணி நியமனங்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்று வேலை வழங்கியதாகவும் இதன் காரணமாக பல நூறு கோடி ரூபாய் முறைகேடு ;நடைபெற்றதாக தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ஆதாரத்தோடு தமிழக டிஜிபிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகளும் தமிழக அரசுக்கு எதிராக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு எனக் குற்றம் சாட்டிய விவகாரத்தில் தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தனது உறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களித்திலிருந்து ஒப்பந்த மொத்த மதிப்பின் 7.5 % முதல் 10 % வரை முறையற்ற பணமாக வசூலித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 252 பக்கங்கள் கொண்ட ஆவணங்களில் அமைச்சர் கே என் நேரு, லஞ்சமாகவும், கட்சி நிதி என்ற பெயரிலும், 1,020 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடிதம் எழுதி 36 நாட்கள் ஆகும் நிலையில், மீண்டும் கடிதம் எழுதியுள்ள அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் அமைச்சர் கே என் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரியுள்ளது.





















