Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும். தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட, பச்சரிசி, கரும்பு, முந்திரி, திராட்சை என பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூபாய் 3 ஆயிரம்:
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மக்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வரை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ள நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் அவர்களுக்கு இந்த தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இதற்கான பணிகளை கூட்டுறவுத்துறையும், நிதித்துறையும் தீவிரப்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க வேண்டிய பச்சரிசி, கரும்பு போன்றவை கொள்முதலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர ஆய்வுப் பணிகள்:
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பொங்கலான 2022ம் ஆண்டில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவில்லை. அது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கப்பட்டது. நடப்பாண்டில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்ட நிலையில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி செயல்படுத்தி வருவதால் நிதிப்பற்றாக்குறையும் உள்ளது. இதனால், பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூபாய் 3 ஆயிரம் ரொக்கம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள்? அந்த செலவை எப்படி ஈடுகட்டுவது? போன்றவற்றையும் அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் எதிரொலிக்குமா?
மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பை பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் ஜனவரி மாதம் வரை வழங்குவதற்கும் வரும் பொங்கல் பண்டிகைக்காக உத்தரவிட முடிவு செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வரும் பொங்கல் பண்டிகை என்பதால் பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்க அன்பளிப்பும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதே அரசியல் நிபுணர்களின் கணிப்பாகும்.
மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் தரமானதாக இருப்பதையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தாெகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அந்த அறிவிப்பில் ரொக்க அன்பளிப்பும் குறித்தும் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
2021ம் ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை திமுக அரசு குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கியது. ஆனால், கடந்தாண்டு கடும் நிதிப்பற்றாக்குறை காரணமாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கியது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.
அரசு ஆர்வம்
இந்த சூழலில், இதை ஈடு செய்யும் வகையில் 2026 பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க அரசு ஆர்வமாக உள்ளது. 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பு வந்த பொங்கல் பண்டிகையில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.
அரசு தொடக்கத்தில் ரூபாய் 5 ஆயிரம் வழங்க முடிவு செய்த நிலையில், நிதிப்பற்றாக்குறை காரணமாக ரூபாய 3 ஆயிரமாக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.





















