"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
இந்தியாவிலே கடந்த 6 மாதங்களில் பருத்தி ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கியமான விவசாய விளைபொருளாக இருப்பது பருத்தி. பருத்தியில் இருந்து எடுக்கப்படும் நூலுக்கு தனி வரவேற்பு உலகளவில் உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பருத்தி ஆடை தயாரிப்பு என்பது மிகப்பெரிய வெற்றிகரமான தொழிலாகவும் உள்ளது.
பருத்தி ஆடை ஏற்றுமதி:
கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு அதிகளவு பருத்தி ஆடைகள் அதிகளவு ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூபாய் 14 ஆயிரத்து 424 கோடி அளவில் பருத்தி ஆடைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - ரூ.14 ஆயிரத்து 424 கோடி
கர்நாடகா - ரூ.5 ஆயிரத்து 655 கோடி
உத்தரபிரதேசம் - ரூ.3 ஆயிரத்து 986 கோடி
ஹரியானா - ரூ.3 ஆயிரத்து 985 கோடி
மகாராஷ்ட்ரா - ரூ.1,470 கோடி
டெல்லி - ரூ.1,253 கோடி
பஞ்சாப் - ரூ.696 கோடி
தமிழ்நாடு முதலிடம்:
தமிழ்நாட்டில் கிடைக்கும் பருத்தியின் தரம் காரணமாக தமிழ்நாட்டின் பருத்தி ஆடைகளுக்கு இந்திய சந்தையிலும், உலகளாவிய சந்தையிலும் தனி வரவேற்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டில் மட்டும் 36 சதவீதம் நடக்கிறது. இந்தியாவிலே அதிகளவு ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
ஆடை உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரியால் திருப்பூர், கோவை போன்ற முக்கிய ஆடை தயாரிப்பு நகரங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவர்கள் கூறும்போது, பருத்தி ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பல்வேறு போட்டிகளை சமாளித்து தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அமெரிக்க வரி விதிப்பால் அதிக பாதிப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது.
வரி நீக்கம் நடக்குமா?
இரண்டாம் நிலை வரி, 25 சதவீதம் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் அமெரிக்க குழு இன்று இந்தியா வரும் சூழலில், வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
செற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி:
பருத்தி ஆடை உற்பத்தி மட்டுமின்றி செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியிலும் தமிழ்நாடு அசத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து கடந்த 6 மாதங்களில் 965 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.
இந்தியாவிலே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் இருந்து ரூபாய் 2 ஆயிரத்து 323 கோடியும், ஹரியானாவில் இருந்து ரூ.1505 கோடியும், மகாராஷ்ட்ராவில் இருந்து ரூபாய் 1103 கோடியும், டெல்லி ரூபாய் 1052 கோடியும், கர்நாடகா ரூபாய் 948 கோடியும், பஞ்சாப் ரூபாய் 548 கோடியும் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி செய்கிறது.





















