Ind Vs SL | புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி...? இலங்கையுடன் இன்று மோதல்
இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. விராட் கோலி தலைமையிலான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோரை கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், இந்த தொடரில் மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையில் பிரித்வி ஷா, இஷான் கிஷான் உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் களமிறங்கிய இந்திய அணி கடந்த 18-ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 263 ரன்களை 36.4 ஓவர்களில் எட்டியது. இந்த போட்டியில் பிரித்விஷா, இஷான் கிஷான் அதிரடியுடன் ஷிகர்தவானின் நிதான ஆட்டமும் இந்திய அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது.
இந்த நிலையில், இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. முதல் போட்டி நடைபெற்ற கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெற உள்ளது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, இஷான் கிஷான் ஆகியோர் இந்த போட்டியிலும் தங்களது அதிரடியைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிகர்தவான் கேப்டனுக்குரிய பொறுப்புடன் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி மனிஷ் பாண்டேவும் பேட்டிங்கில் பக்க பலமாக உள்ளார்.
பந்துவீச்சில் புவனேஸ்குமார் தலைமையில் தீபக்சாஹருடன் இணைந்து ஹர்திக் பாண்ட்யாவும் வேகப்பந்துவீச்சை கவனிக்க உள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் சுழற்பந்துவீச்சில் உள்ளனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை பெர்னாண்டோ, பானுகா, அசலாங்கா, கேப்டன் சனகா, கருணரத்னே பேட்டிங்கில் பொறுப்புடன் ஆடினாலும் பந்துவீச்சு பலவீனமாக இருந்ததே கடந்த போட்டியில் அந்த அணி தோற்றதற்கு முக்கிய காரணம். அந்த அணியின் பந்துவீச்சாளர்களான சமீரா, டி சில்வா, லக்ஷன் சந்தகன், ஹசரங்கா ஆகியோர் மேலும் சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே அவர்களால் இந்திய அணியை கட்டுப்படுத்த முடியும்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றுவதுடன், புதிய சாதனையை படைக்க உள்ளது. ஒரு தனிப்பட்ட அணிக்கு எதிராக ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஒருநாள் போட்டி வெற்றி என்ற சாதனையை இந்திய அணி படைப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அணியும், இலங்கை அணியும் இதுவரை 160 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 92 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் டையில் முடிந்துள்ளது. 11 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒரு தனிப்பட்ட அணிக்கு எதிராக ஒரு கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் பெற்ற வெற்றி என்ற சாதனை நிகழும்.
பாகிஸ்தான் அணியும் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 92 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 92 வெற்றிகளை ஒருநாள் போட்டிகளில் பெற்றுள்ளது. இந்திய- இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளது.