இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா நிதான தொடக்கம் : ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் அரைசதம்
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோரின் அரைசதத்தின் உதவியால் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது.
கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்த காரணத்தாலும், வானிலை மந்தமாக இருப்பதாலும் பந்துவீச்சு நன்றாக எடுபடும் என்று ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் போட்ட சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தொடங்க தாமதமானது.
மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். காலையில் வானிலை மந்தமாக இருந்ததால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ராபின்சனும் கடும் நெருக்கடி அளித்தனர். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 10 ரன்களையே எடுத்திருந்தது.
பின்னர், சாம்கரனின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை ஓடவிட்ட ரோகித் சர்மா தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பினார். ஆனால், கே.எல்.ராகுல் மிகவும் நிதானமாகவே ஆடினார். உணவு இடைவேளைக்கு முன்பு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், இரு அணியினருக்கும் உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பிறகு ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் ஒருநாள் போட்டிகளில் ஆடுவது போன்று மிகவும் இயல்பான ஆட்டத்தை ஆடினார். கே.எல்.ராகுல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் நிதானமான ஆட்டத்தை ஆடி வருகிறார். இங்கிலாந்து கேப்டன் இந்த ஜோடியை பிரிப்பதற்காக ஆண்டர்சன், ராபின்சன், சாம்கரன், மார்க்வுட், மொயின் அலியை ஆகியோரை பயன்படுத்தினார். ஆனால், யாருடைய பந்துவீச்சும் எடுபடவில்லை.
அப்போது, அணியின் ஸ்கோர் 126-ஆக இருந்தபோது, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டானர். அவர் 145 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 83 ரன்கள் குவித்தார். அடுத்து புஜாரா களமிறங்கினார். அவர் 23 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் பார்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். சற்றுமுன்வரை 53 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை குவித்து ஆடிவருகின்றனர்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக 14 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியிலும் இந்திய அணியில் அஸ்வின் களமிறக்கப்படவில்லை. மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் பிரதான சுழற்பந்துவீச்சாளராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.