மோடி நினைத்தால் நம்ம டீம் க்ளோஸ் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பேச்சு!
பாஜக தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மல்வியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை இந்தியா தான் நடத்துகிறது என்றும், பிரதமர் மோடி எப்போது நினைக்கிறாரோ அப்போது பாகிஸ்தான்...

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக அந்த அணியின் முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா அண்மையில் பதவி ஏற்றார். இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலைக் குழு கூட்டம் கராச்சியில் நடைபெற்றது.
இதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரமீஸ் ராஜா, துபாயில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு வெற்று செக் தயாராக இருப்பதாக ஒரு தொழிலதிபர் தன்னிடம் தெரிவித்தார் என்றும் அதில் தேவையான தொகையை அணி நிரப்பி எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 50 சதவீதம் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) வழங்கும் நிதியின் கீழ் இயங்குவதாக தெரிவித்தார். ஆனால், ஐசிசிக்கான 90% நிதி இந்தியாவிடம் இருந்து செல்வதாக கூறிய அவர் இதனால் தனக்கு அச்சம் ஏற்படுவதாக கூறி உள்ளார். காரணம், ஒரு வேளை இந்தியா ஐ.சி.சி.க்கு வழங்கும் நிதியை குறைத்துவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும் நிதியை ஐ.சி.சி. நிறுத்திவிடும் நிலை உள்ளது.

ஏனென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு சதவீதம் கூட ஐ.சி.சிக்கு நிதி வழங்குவது இல்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலையும் நிலைக்கு கூட தள்ளப்படலாம். இந்திய பிரதமர் பாகிஸ்தானுக்கு ஐசிசி வழங்கும் நிதியை நிறுத்த சொன்னாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குலைந்துவிடும்.
ரமீஸ் ராஜா பேசிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மல்வியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை இந்தியா தான் நடத்துகிறது என்றும், பிரதமர் மோடி எப்போது நினைக்கிறாரோ அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விடுவார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
துபாயில் நடைபெற உள்ள உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டும் 2 வது குழுவில் இடம்பெற்று உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இம்மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களே பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த சூழலில் தான் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த அறிவிப்பை ரமீஸ் ராஜா வெளியிட்டுள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள குழுவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும் உள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் குழு ஒன்றில் விளையாடுகின்றன.





















