ICC T-20 WC: காயத்திற்கு மருந்து போடும் ஆப்கான்... நடப்புச் சாம்பியனை சம்பவம் செய்து அசத்தல்!
4 ஓவர்கள் வீசிய நபி, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது நபியின் சுழலில் முக்கிய பேட்ஸ்மேன்கள் சிக்கியதால்தான் போட்டி முடிவு ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக திரும்பியது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள், தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் நான்கு பயிற்சி ஆட்டங்களும், இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளும் நடந்து முடிந்துள்ளன. இதில், நடப்பு சாம்பியன்ஸ் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கவனிக்கத்தக்க வெற்றியை ஈட்டி வலுவான அணியாக நிரூபித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
துபாய் ஐசிசி அகாடெமியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணி ஓப்பனர்கள் ஹஸ்ரத்துல்லா (56), முகமது ஷாசாத் (54) வலுவான ஓப்பனிங் கொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 90 ரன்கள் எட்டிய வரை விக்கெட் ஏதும் விழவில்லை. போட்டியின் 9வது ஓவரில்தான் வெஸ்ட் இண்டீஸுக்கு முதல் ப்ரேக்-த்ரூ. வால்ஷ் வீசிய பந்தில் ஹஸ்ரத்துல்லா கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். அவரை அடுத்து களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான் ஆகியோரும் ஓரளவு ரன் சேர்த்ததால், அணியின் ஸ்கோர் 150-ஐ கடந்தது. இதனால், 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் எடுத்து அசத்தியது ஆப்கானிஸ்தான். க
கடினமான இலக்கை சேஸ் செய்து பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது நபி வீசிய முதல் ஓவரில் ஓப்பனர் சைமன்ஸ் டக்-அவுட்டாக மற்றொரு ஓப்பனராக எவில் லூயிஸும் 3 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் தந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் திணறியது. ஒன் டவுன் களமிறங்கிய ராஸ்டன் சேஸ் (54*) மட்டும் அரை சதம் கடக்க, நிக்கோல்ஸ் பூரன் (35) ரன் சேர்த்து வெஸ்ட் இண்டீஸை மோசமான தோல்வியில் இருந்து காப்பாற்றினர். மற்ற பேட்டர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் , 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.
#WestIndies lost by 56 runs with 5 wickets in hand in a T20 game. That’s when #Afghanistan gave away 15 extras. WI’s batting approach in the two warmups is 🤷♂️
— Aakash Chopra (@cricketaakash) October 20, 2021
Nabi’s spell of 3 wickets for two runs in four overs is from another planet though. #T20WorldCup
ஆப்கானிஸ்தான் பெளலர்களைப் பொருத்தவரை முகமது நபி 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக், கரீம் ஜனத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 4 ஓவர்கள் வீசிய நபி, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது நபியின் சுழலில் முக்கிய பேட்ஸ்மேன்கள் சிக்கியதால்தான் போட்டி முடிவு ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக திரும்பியது. இதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இதுவரை விளையாடியுள்ள இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவி இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 130 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது, இப்போது சேஸிங்கிலும் 135 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் தாண்டவில்லை. இரண்டு போட்டிகளிலும் பெளலிங்கும் சொல்லி கொள்ளும் அளவிற்கு இருக்கவில்லை என்பதால் கோப்பையை தக்க வைத்து கொள்ள சூப்பர் 12 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் கம்பேக் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்