Serena Williams : வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்: டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ்
டென்னிஸ் உலகின் ஜாம்பவான். 23 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்களை வென்ற ஈடு இணையற்ற வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இன்று தனது டென்னிஸ் பயணத்திற்கு ஓய்வு கொடுத்தார்.
டென்னிஸ் உலகின் ஜாம்பவான். 23 கிராண்ட் ஸ்லாம் டைட்டில்களை வென்ற ஈடு இணையற்ற வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இன்று தனது டென்னிஸ் பயணத்திற்கு ஓய்வு கொடுத்தார். தனது ஓய்வு முடிவை அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக ஓய்வை விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் ஓய்வு பெற்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று செரீனா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். மேலும் தொடரில் இருந்தும் வெளியேறினார். பின்னர் அவர் உணர்வுப்பூர்வமான உரையாற்றினார். அது ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்தது.
அவர் பேச்சிலிருந்து..
என் வாழ்வில் வீனஸ் இல்லாவிட்டால் நான் செரீனாவாக இருந்திருக்க மாட்டேன். அவர்தான் செரீனா உயிருடன் இருக்க ஒரே காரணம். இந்த நேரத்தில் எனது தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸ் (80), எனது தாய் ஒராசீன் ப்ரைஸ் (70) ஆகியோரையும் நினைவு கூர்கிறேன். நான் இந்தப் போட்டியில் நன்றாக விளையாட முயற்சித்தேன். ஆனால் அஜ்லா ரொம்பவே சிறப்பாக விளையாடினார். நீங்கள் நான் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி அப்பா. அம்மா உங்களுக்கும் நன்றி. இது எல்லாமே என் அம்மா, அப்பாவிடம் இருந்து தான் ஆரம்பித்தது. என் புகழுக்கு உரித்தானவர்கள் அவர்கள் தான். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இன்று நான் சிந்துவது ஆனந்தக் கண்ணீர். வீனஸ் உனக்கும் நன்றி. உன்னால் தான் வாழ்வு ஒரு ஃபன் ரைட் போல் இருக்கிறது.
இனி நான் என் வாழ்வின் வேறு ஒரு பகுதியை ஆராய்ந்து அனுபவிக்கப் போகிறேன். இன்னும் நான் இளமையாகத் தான் இருக்கிறேன். அதனால் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன். ஒரு தாயாக வாழ்வை அனுபவிக்க விரும்புகிறேன். இந்த முடிவை எடுப்பது கடினமாகத் தான் இருந்தது. ஒரு கட்டத்தில் நான் என்னையே கேட்டுக் கொண்டேன். இனி டென்னிஸ் வாழ்க்கையை விரிவுபடுத்தப் போகிறேனா அல்லது குடும்ப வாழ்க்கையை விரிவுபடுத்தப் போகிறேனா என்று கேட்டேன். என் மனம் குடும்பத்திற்கு வாக்களித்தது. அதனால் ஓய்வை அறிவிக்கிறேன்.
என்னைப் போல் நிறைய விளையாட்டு வீராங்கனைகள் முடிவு செய்திருப்பார்கள். சிலர் இல்லை விளையாட்டே பிரதானம் என்றும் முடிவு செய்திருப்பார்கள். இரண்டுமே சிறந்த முடிவுதான். தனிநபர் சார்ந்தது. இவ்வாறு செரீனா வில்லியம்ஸ் உணர்ச்சி பொங்க பேசினார்.
அமெரிக்காவில் 1981ல் பிறந்த செரீனா வில்லியம்ஸ் 1995ல் டென்னிஸ் களம் கண்டார். வெறும் ஏழே ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை என்ற அந்தஸ்தைப் பெற்றார். 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 6 அமெரிக்க ஓபன், 7 ஆஸ்திரேலிய ஓபன், 7 விம்பிள்டன், 3 பிரெஞ்சு ஓபன் பட்டங்கள் அடங்கும். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக்கிலும் 4 தங்கப் பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார்.