மேலும் அறிய
ஹாக்கி உலகக் கோப்பை: மதுரைக்கு வந்த வெற்றி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு.. மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு !
உலக கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை பயணிக்கும் இடங்களில் நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஹாக்கி விளையாட்டுப் போட்டி
Source : whatsapp
14 - வது ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ஹாக்கி போட்டி
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் 05.11.2025 அன்று அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 10.11.2025 அன்று சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தி, உலக கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு முழுவதற்குமான சுற்றுப்பயணத்தை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை
14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை இன்று ( 14.11.2025) மதுரை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதையொட்டி மதுரை – சிவகங்கை சாலையில் உள்ள விக்ரம் மருத்துவமனை அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மதுரை நாராயணா பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், வரவேற்பு நடனம், அணிவகுப்பு மரியாதை போன்ற நிகழ்ச்சிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளையும் உற்சாக வரவேற்பு
நாளை (15.11.2025) காலை 9.00 மணியளவில் வெற்றிக் கோப்பை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கோவிலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் காமராஜர் சாலை, தெப்பக்குளம், குருவிக்காரன் சாலை, ஆவின் சந்திப்பு, கே.ஜே.நகர் வழியாக மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வந்தடைய உள்ளது. வழிநெடுக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. மேலும் உலக கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை பயணிக்கும் இடங்களில் நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள், காவல் துறை சார்பில் குதிரைப்படை அணிவகுப்புகள், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 15.11.2025 அன்று மாலை, வெற்றிக் கோப்பை தேனி மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வழி அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















