"அண்ணாமலைக்கு ஹிந்தி தெரியல! சீரியஸா எடுத்துக்காதீங்க”ஃபட்னாவிஸ் ரியாக்ஷன்
மும்பை குறித்து அண்ணாமலை சொன்ன கருத்துக்கு எதிராக மகாராஷ்டிராவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை பேசியதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என சொல்லியுள்ளார் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஜனவரி 15-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் பாம்பே மகாராஷ்டிராவின் நகரம் கிடையாது, அது ஓர் சர்வதேச நகரம் என பேசியிருந்தார்.
இதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா உள்ளிட்ட கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மும்பை என்று சொல்லாமல் பாம்பே என சொல்லியதன் மூலம் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரித்து பாம்பே என பெயரிட பாஜக திட்டமிடுகிறது என உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, அண்ணாமலையை விமர்சிக்கும் போது தமிழர்களை மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியதை நியாயப்படுத்தி பேசியது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அண்ணாமலையை ரசமலாய் என்றும் சொல்லியிருந்தார்.
மேலும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ”மும்பைக்குள் அண்ணாமலை கால் வைத்தால் கால்களை வெட்டுவோம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முடிந்தால் வெட்டிப் பாருங்கள் என பதிலடி கொடுத்தார் அண்ணாமலை.
இந்தநிலையில் அண்ணாமலை பேச்சு தொடர்பாக முதலமைச்சர் ஃபட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், ‘அண்ணாமலை பேசியதை திரித்து பெரிய பிரச்னையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மும்பை சர்வதேச நகரம் தான் என்று சொன்னாரே தவிர, அந்த நகரம் மகாராஷ்டிராவுக்கு சொந்தமானது கிடையாது என சொல்லவில்லை. அவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கிடையாது. பாஜக தேசிய தலைவரும் கிடையாது. அதனால் அவரது கருத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. ஹிந்தி மொழி புரிதல் இல்லாமல் அவர் மும்பைக்கு பதில் பாம்பே என சொல்லியிருக்கிறார். சில நேரங்களில் நாமும் சென்னைக்கு பதில் மெட்ராஸ் என சொல்வோம். யாராவது அதை திருத்தினால் நிச்சயம் திருத்திக் கொள்ள வேண்டும். அதனால் அண்ணாமலையின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை. அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.





















