Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ஈரானில் மக்கள் போராட்டம் உச்சமடைந்து வரும் நிலையில், அமெரிக்கார்களை அங்கிருந்து வெளியேற ட்ரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, ஈரான் உச்ச தலைவர் காமேனி, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் முழுவதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளில், பலியானோர் எண்ணிக்கை 646-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ட்ரம்ப் அரசுக்கு ஈரான் உச்ச தலைவர் காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஈரான் போராட்ட வன்முறையில் பலி எண்ணிக்கை உயர்வு
ஈரானில், தொடரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், அதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. அதில் சிக்கி இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
போராட்டங்கள் தொடர்வதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்களை ஈரான் அரசு வெளியிடவில்லை.
அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் அரசு உத்தரவு
இந்நிலையில், அங்குள்ள அமெரிக்கர்கள், ஆர்மீனியா, துருக்கி வழியே உடனடியாக வெளியேறுமாறு, அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈரான் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனால், வன்முறையும், காயமும் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலை மூடல்கள், பொது போக்குவரத்து இடையூறுகள், இணைய தடைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஈரான் அரசு தொலைபேசி, மொபைல் மற்றும் தேசிய இணைய நெட்வொர்க்குகளுக்கான அணுகலை கட்டுப்படுத்தியுள்ளது என்றும், விமான நிறுவனங்கள் ஈரானுக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதும் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அங்கிருக்கும் அமெரிக்கர்கள், ஆர்மீனியா, துருக்கி வழியாக ஈரானை விட்டு வெறியேறுங்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், ஈரானை அமெரிக்கா தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்காவை எச்சரித்த காமெனி
இதனிடையே, ஈரானை தாக்குவதாக அச்சுறுத்தல் விடுத்தும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளதை அடுத்து, ஈரான் உச்ச தலைவர் காமெனி, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது குறித்து, 86 வயதாகும் காமேனி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "மாபெரும் ஈரானிய தேசம் எதிரிகளை எதிர்கொள்வதில் தனது உறுதியையும் அடையாளத்தையும் நிலைநாட்டியுள்ளது. இது அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும், அவர்கள் தங்கள் வஞ்சக செயல்களை நிறுத்திவிட்டு, தங்கள் துரோக கூலிப்படையினரை நம்புவதை நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.
The great Iranian nation has asserted its resolve and identity in the face of the enemies. This was a warning to US politicians that they should halt their deceitful actions and stop relying on their traitorous hirelings.
— Khamenei.ir (@khamenei_ir) January 12, 2026
மேலும், "ஈரானிய நாடு வலிமையானது, சக்தி வாய்ந்தது மற்றும் விழிப்புணர்வு கொண்டது; அது எதிரியை அறிந்திருக்கிறது, எப்போதும் களத்தில் உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார்.
குறைந்த ஆபத்து முதல் அதிக ஆபத்து வரையிலான போராட்டங்களால் பாதிக்கப்பட்ட ஈரானில் தலையிடுவதற்கான விருப்பங்களைப் பற்றி யோசித்து வருவதாகவும், ஆனால் தனது இறுதி இலக்கைப் பற்றிய அவரது முடிவைப் பொறுத்து தனது போக்கைத் தேர்ந்தெடுப்பதாகவும் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, காமேனி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.





















