H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். வாகனத்தில் ஏற மாட்டேன் என ஹெச்.ராஜா பிடிவாதமாக இருந்த நிலையில், அந்தப் பகுதியே போராட்டமாக மாறியது.
திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த 21ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழாவிற்காக சிக்கந்தர் பாஷா தர்கா சார்பாக கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் வளர்பிறைக் கொடி ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா நிர்வாகம் கொடியேற்றி தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாக தர்காவை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் சட்ட விரோதமாக கொடியேற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவரைத் தொடர்ந்து நேற்று மதியம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரம் இருக்கும் பகுதிக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் சென்றனர். ஆனால் அங்கு செல்ல அனுமதி இல்லை என சொல்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. கல்லத்தி மரத்தில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஹெச்.ராஜா உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பழனி ஆண்டவர் கோவில் வாசலில் எச் ராஜாவை கைது செய்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் இறங்கினர். இந்தநிலையில் இடையூறு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்





















