148 வருடத்தில் இதுவே முதன்முறை.. இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய தொடக்க வீரர்கள் - யார் அந்த ஹீரோக்கள்?
வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் 148 ஆண்டுகள் டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக புதிய சாதனையை லாதம் - கான்வே படைத்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மவுண்ட் மெளங்கனியில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடிக்கும் அரிய டெஸ்ட் போட்டியாக மாறியுள்ளது.
148 வருடத்தில் இதுவே முதன்முறை:
இந்த போட்டியில் நியூசிலாந்தின் முதல் இன்னிங்சில் அந்த அணியின் தொடக்க வீரர் டாம் லாதம் சதமும், கான்வே இரட்டை சதமும் விளாசினர். அதேபோல, நியூசிலாந்து அணியின் 2வது இன்னிங்சில் கான்வே சதமும், டாம் லாதம் சதமும் விளாசினர்.

ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் தொடக்க வீரர்கள் இருவரும் சதம் விளாசுவது 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும். இந்த அரிய சாதனையை படைத்த கேப்டன் லாதம் - கான்வேவிற்கு வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கூட இதுபோன்ற சாதனை படைக்கப்பட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
லாதம் - கான்வே அபாரம்:
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 578 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் டாம் லாதம் 137 ரன்களும், டெவோன் கான்வே 227 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹாேட்ஜே சதம் விளாச , ப்ரண்டன் கிங் அரைதசம் விளா, கேம்ப்பெல், அதான்சே, கிரீவ்ஸ் ஒத்துழைப்பு அளிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 420 ரன்கள் எடுத்து அவுட்டானாது.

இதையடுத்து, 2வது இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணிக்காக கேப்டன் டாம் லாதம் - கான்வே ஜோடி அபாரமாக ஆடியது. லாதம் 130 பந்துகளில் 101 ரன்களும், கான்வே 139 பந்துகளில் 100 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். 306 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தத்தளிக்கும் வெஸ்ட் இண்டீஸ்:
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்ப்பெல் 16 ரன்களுக்கு அவுட்டாக முதல் இன்னிங்சில் சதம் விளாசிய ஹோட்கே டக் அவுட்டாக, அதான்சே 2 ரன்னிலும், கிரீவ்ஸ் ரன் ஏதுமின்றியும் அவுட்டாக ப்ரண்டன் கிங் மட்டும் தனி ஆளாக போராடினார். அவரும் 96 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டாக வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தோல்வியின் பிடியில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு இன்னும் 355 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 4 விக்கெட் மட்டுமே உள்ளது. ஷாய் ஹோப் 3 ரன்களுடனும், இம்லாச் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்றாலும், டிரா செய்தாலும் நியூசிலாந்து தொடரை வெல்லும்.




















