WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாய்ண்ட்ஸ் டேபிளில் இந்தியாவிற்கு இப்போ என்ன இடம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் டேபிளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வெற்றி:
இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதன் இறுதிப்போட்டியில் முன்னேற வேண்டுமென்றால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், நாக்பூர் டெஸ்ட் வெற்றி மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 70.83 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 61.67 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி 59.93 சதவீதத்துடன் இருந்தது. தற்போது சதவீத எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது மூலம் ஆஸ்திரேலிய அணி 75.56 சதவீதத்திற்கு சரிந்துள்ளது.
பாயிண்ட்ஸ் டேபிள்:
மூன்றாவது இடத்தில் இலங்கை அணி உள்ளது. அவர்கள் 53.33 சதவீதத்துடன் உள்ளது. தென்னாப்பிரிக்க அணி 48.72 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து அணி 46.97 சதவீதத்துடன் 5வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 40.91 சதவீதத்துடன் 6வது இடத்திலும், பாகிஸ்தான் 38.1 சதவீதத்துடன் 7வது இடத்திலும், நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 27.27 சதவீதத்துடன் 8வது இடத்திலும் , வங்காளதேசம் 11.11 சதவீதத்துடன் 9வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த முறை விராட்கோலி தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பறிகொடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக ஆடினால் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்யும். அதேசமயம் இலங்கை அணி அவர்களுக்கான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழக்கும் அபாயமும் உள்ளது.
இதனால், இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் தங்கள் வெற்றிக்காக போராடுவார்கள் என்பது மட்டும் உறுதி என்பதால் போட்டிகள் விறுவிறுப்பாக செல்லும். நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின், ஜடேஜா முக்கிய பங்கு வகித்தனர். இருவரும் இணைந்து ஆஸ்திரேலியாவின் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணிக்காக கேப்டன் ரோகித்சர்மா 120 ரன்களையும், ஜடேஜா 70 ரன்களையும், அக்ஷர் படேல் 84 ரன்களையும் விளாசினர்.
இந்த வெற்றி மூலம் உற்சாகமடைந்துள்ள இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் தங்களது வெற்றிப்பயணத்தை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: Ind vs Aus 1st test: அஸ்வின், ஜடேஜா சுழலில் சுழன்ற ஆஸ்திரேலியா: முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அசத்தல் வெற்றி...!
மேலும் படிக்க: Indian Players Record: அடேங்கப்பா... ஒரே போட்டியில இவ்வளவு சாதனைகளா..? மிரட்டிய இந்திய வீரர்கள்..!