IND vs WI 2nd T20 : பவுலிங்கில் மிரட்டல்..! பேட்டிங்கில் அசத்தல்..! இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்..!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியினரின் உடைமைகள் வர தாமதம் ஆன காரணத்தால் இந்த போட்டி திட்டமிட்ட நேரத்தை காட்டிலும் 3 மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது.
இதையடுத்து, இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரண் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, ரோகித்சர்மாவும் சூர்யகுமார் யாதவும் முதலில் களமிறங்கினர். கடந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய ரோகித்சர்மா, இந்த போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலே அவர் ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் 6 பந்தில் 1 சிக்ஸர் அடித்த சூர்யகுமார் யாதவ் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். அவரும் 11 பந்தில் 1 சிக்ஸர் அடித்து 10 ரன்களில் அவுட்டானார்.
40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்துள்ள நிலையில், விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் களமிறங்கினார். அவருடன், ஹர்திக் பாண்ட்யா இணைந்தார். இருவரும் இணைந்து சிறிது நேரம் பொறுப்புடன் ஆடினர். ரிஷப்பண்ட் அதிரடியாக ஆட முயற்சித்தார். அவர் 12 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24 ரன்கள் விளாசிய நிலையில் அவுட்டானார்.
ஆனாலும், ஹர்திக்பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார். இதனால், இந்திய அணி 100 ரன்களை கடந்தது. அணியின் ஸ்கோர் 104 ரன்களை கடந்த பிறகு, ஹர்திக் பாண்ட்யா 31 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர், இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. கடந்த போட்டியில் அசத்திய தினேஷ் கார்த்திக் 13 பந்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா மட்டும் 30 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் இந்திய வீரர்கள் மந்தமாக விளையாடியதுடன், விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால் இந்தியா 19.4 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓபே மெக்காய் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 139 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் அற்புதமான தொடக்கம் அளித்தார். கைல் மேயர்ஸ் 8 ரன்களிலும், கேப்டன் பூரன் 14 ரன்களிலும், ஹெட்மயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் பிரண்டன் கிங் அதிரடியாகவே ஆடினார். அவர் 52 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்கள் விளாசி அவுட்டானார். விக்கெட் கீப்பர் தாமஸ் கடைசியில் அதிரடி காட்டியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்களை விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தாமஸ் 19 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்