இன்னும் சற்று நேரத்தில் மோதல்.. முதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா? முட்டுக்கட்டை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி தொடங்கிய இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று லக்னோவில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா:
இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த இரு அணிகளும் இன்று மோதுவதால் தொடரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
இலங்கை அணிக்கு எதிராக 400 ரன்களை குவித்து தனது பேட்டிங் பலத்தை இந்த தொடரில் நிரூபித்துள்ளது. வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம் காட்டும். உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடரில் ஆடியதும் அவர்களுக்கு இந்த போட்டியில் மிகுந்த பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெற்றி அவசியத்தில் ஆஸ்திரேலியா:
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனே, மேக்ஸ்வெல், கிரீன் முக்கிய பேட்ஸ்மேன்களாக உள்ளனர். கடந்த போட்டியில் ஜொலிக்காத மார்ஷ் கிரீன், மேக்ஸ்வெல் நன்றாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் டி காக், டுசென், மார்க்ரம், கிளாசென், மில்லர், கேப்டன் பவுமா பேட்டிங்கில் முக்கிய வீரர்களாக உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளிக்கும் விதமாக ரபாடா, ஜான்சென், மகாராஜ், நிகிடி, ஹென்ட்ரிக்ஸ், ஷம்சி சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கை நிலைகுலைய வைக்கும் விதத்தில் கேப்டன் கம்மின்ஸ், ஜம்பா, ஹேசல்வுட், அப்பாட், ஸ்டோய்னிஸ் பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
சற்று நேரத்தில் தொடக்கம்:
லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாயி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது. பலமிகுந்த இரு அணிகளும் மோதுவதால் இந்த போட்டி கண்டிப்பாக புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆஸ்திரேலியா: கேப்டன் பாட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனே, மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஜம்பா, ஹேசல்வுட், அப்பாட், ட்ராவிஸ் ஹெட், ஸ்டோய்னிஸ், இங்லீஷ், அலெக்ஸ் கேரி.
தென்னாப்பிரிக்கா: குயின்டின் டி காக், தெம்பா பவுமா, வான்டெர் டுசென், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், ஜான்சென், கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி, ரபாடா, லிசாட் வில்லியம்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஆண்டிலேல பெலுக்வாயோ, ஷம்சி