Team India Coach: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தோனி ஆக முடியாதா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தோனியால் விண்ணப்பிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா..?
டி20 உலகக் கோப்பை 2024க்குப் பிறகு, இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. முன்னதாக, ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின்போதே முடிவுக்கு வந்தது. ஆனால், பிசிசிஐயின் கோரிக்கையின்படி, டி20 உலகக் கோப்பை வரை தலைமை பயிற்சியாளராக செயல்படுவதாக ராகுல் டிராவிட் ஒப்புக் கொண்டார். சமீபத்தில், கவுதம் கம்பீர் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மே 27 வரை தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது. இப்போது இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். மகேந்திர சிங் தோனியை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடிக்கடி எழுந்து வருகிறது. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தோனியால் விண்ணப்பிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா..?
தோனி ஏன் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாது?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஒருவர் விண்ணப்பிக்க வேண்டும் எனில், அவர் எந்த வகை கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தால் மட்டுமே முடியும். எம்.எஸ் தோனி கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது வரை ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதாவது தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடும் எந்த வீரரும் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையின்போது கூட இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டிருந்தாலும், அவர் பிசிசிஐயின் கோரிக்கையின்படி பகுதிநேரமாகவே (பார்ட் டைம்) செயல்பட்டார். மேலும், இந்திய அணிக்காக தோனி ஆலோசகராக செயல்பட்டபோது, அதற்காக அவர் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2025ம் ஆண்டிலும் எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. ஐபிஎல் 2024ல், எம்.எஸ்.தோனி 14 போட்டிகளில் 11 இன்னிங்ஸில் 53.67 சராசரியில் 220.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 161 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக நல்ல பார்மில் இருக்கும் தோனி, அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனில் ஓய்வு பெறுவார் என்ற நம்பிக்கை இல்லை.
தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் மே 27 ம் முடிவுக்கு வந்தது. முன்னதாக, பிசிசிஐ விண்ணப்பங்களுக்கான கூகுள் படிவத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, பயிற்சியாளர் பதவிக்கு 3,000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி, எம்.எஸ்.தோனி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களிலும் ஒரு சிலர் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும், அதை உடனடியாக நீக்கப்பட்டு விட்டதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. சமீபத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது.
விரைவில் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்பதை பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.