மேலும் அறிய
Advertisement
முதல் பாதியில் பொறுப்பு....இரண்டாம் பாதியில் நெருப்பு...ஜாஸ் பட்லர் எப்படி சதமடித்தார்?
தேவை என்னவோ அதை உணர்ந்து சரியான திட்டமிடலோடு ஸ்மார்ட் ஒர்க் செய்தால் எந்த மைதானத்திலும் சாதிக்க முடியும் என்பதை நேற்று ஜாஸ் பட்லர் நிரூபித்திருந்தார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று மோதியிருந்தன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஜாஸ் பட்லரின் அசத்தலான சதம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 67 பந்துகளை சந்தித்திருந்த ஜாஸ் பட்லர் 101 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. துபாய், அபுதாபி, ஷார்ஜா இந்த மூன்று மைதானங்களில் ரொம்பவே மெதுவான மந்தமான மைதானமாக இருப்பது ஷார்ஜாவே. இந்த மைதானத்தில் அணிகளின் ஆவரேஜ் ஸ்கோரே 135-140 தான். இப்படியான மைதானத்தில் ஒரே ஒரு வீரர் மட்டும் எப்படி 101 ரன்களை அடித்தார்? தேவை என்னவோ அதை உணர்ந்து சரியான திட்டமிடலோடு ஸ்மார்ட் ஒர்க் செய்தால் எந்த மைதானத்திலும் சாதிக்க முடியும் என்பதை நேற்று ஜாஸ் பட்லர் நிரூபித்திருந்தார்.
மந்தமாக இருக்கும் ஷார்ஜா பிட்ச் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே ஒத்துழைக்கும். இலங்கை அணி சுமாரான அணியாக இருந்தாலும் அவர்களிடம் இரண்டு தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். லெக் ஸ்பின்னரான வனிந்து ஹசரங்கா இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகல் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். எக்கானமிக்கலாக வீசுவதோடு விக்கெட் வேட்டையும் நடத்துகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த போட்டியில் இதே ஷார்ஜாவில் ஹாட்ரிக் எடுத்திருந்தார். ஆஃப் ஸ்பின்னரான மஹீஸ் தீக்ஷனா கேரம் பால்கள் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை பேட்டை வீச விடாமல் திணறடித்து வருகிறார். இந்த தொடரில் இதுவரை 8 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.
ஷார்ஜாவில் வைத்து இலங்கையை ஒரு அணியை எதிர்கொள்கிறது எனில் இந்த இரண்டு ஸ்பின்னர்களும்தான் அவர்களுக்கு வில்லனாக இருப்பர். இங்கேதான் ஜாஸ் பட்லரின் சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும். சதமடித்திருக்கும் பட்லர் இவர்கள் இருவரின் பந்துகளில் வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
வனிந்து ஹசரங்காவின் 11 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களையும் மஹீஸ் தீக்ஷனாவின் 13 பந்துகளை எதர்கொண்டு 6 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். மொத்தமாக 24 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் மட்டுமே. ஸ்ட்ரைக் ரேட் 50.
ஒயிட் பால் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இந்த ஷார்ஜா மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துதான் ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவரால் ஸ்பின்னர்களை அட்டாக் செய்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்திருந்தால் விக்கெட் விழுவதற்கான சாத்தியம் அதிகம் இருந்திருக்கும். இவர்கள் இருவரையும் கடந்துவிட்டால் அந்த விக்கெட் ரிஸ்க்கை தவிர்த்துவிடலாம் என்பது பட்லரின் கணக்கு. அதாவது, யாரை அட்டாக் செய்ய வேண்டும். யாரை அட்டாக் செய்யக் கூடாது என்பது பற்றிய ப்ளூ ப்ரிண்ட் பட்லரின் மூளைக்குள் கச்சிதமாக இருந்தது.
ஸ்பின்னர்களிடம் பதுங்கிய பட்லர், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஈவு இரக்கமின்றி அடித்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 43 பந்துகளில் 89 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 200+. ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் 50 மட்டுமே வைத்திருந்தார்.
அதேபோல், அணியின் தேவை என்னவோ அதையும் உணர்ந்து ஆடினார். இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை விட்டிருந்தது. அந்த சமயத்தில் களத்தில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கு இரண்டு ஆப்சன் உண்டு. ஒன்று விக்கெட் அழுத்தத்திற்காக ஆட வேண்டும் அல்லது ரன்ரேட் அழுத்தத்திற்காக ஆட வேண்டும். ரன்ரேட் அழுத்தத்திற்காக வேகமாக ஆடினால் அடுத்தடுத்து விக்கெட் சரிய வாய்ப்பிருக்கிறது. அது பேராபத்தில் முடியும். அணியாக மிகக்குறைந்த ஸ்கோரை மட்டுமே எடுக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவர். அதனால் ஜாஸ் பட்லர் ரன்ரேட் அழுத்தத்திற்காக ஆடவில்லை. விக்கெட் அழுத்தத்தை போக்குவதற்காக மட்டுமே ஆடினார். முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 47-3 என்ற நிலையிலேயே இருந்தது. பட்லரும் பொறுமையாக விக்கெட் விடக்கூடாது என்பதற்காக நின்று நிதானமாக ஆடினார். ஆனால், அடுத்த 10 ஓவர்களில் வெடித்து சிதறினார். கடைசி 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 116 ரன்களை எடுத்திருந்தது. இந்த 116 ரன்களில் பெரும்பாலான ரன்களை ஜாஸ் பட்லரே எடுத்திருந்தார். வேகப்பந்து வீச்சாளர்களை மரண அட்டாக் செய்திருந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தில் சமீராவின் ஃபுல் டாஸில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்தார். இந்த டி20 உலகக்கோப்பையில் பதிவு செய்யப்பட்ட முதல் சதம் இது. அணியின் ஸ்கோரும் 163 ஆக உயர்ந்தது.
பட்லரின் சதம் மட்டுமே இங்கிலாந்து அணி பௌலர்கள் கொஞ்சம் சுதந்திரமாக பந்து வீசுவதற்கான வெளியை உருவாக்கியது. இங்கிலாந்து அணியின் பௌலர்களும் ஃபீல்டர்களும் சிறப்பாக செயல்பட்டு இலங்கையை 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion