(Source: ECI/ABP News/ABP Majha)
SHAMI: காயமடைந்த ஷமிக்கு பதிலாக இந்திய அணிக்கு மாற்று வீரர்.. அண்மையில் கோப்பையை வென்றவருக்கு வாய்ப்பு
காயம் காரணமாக வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இருந்து விலகிய, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரரை இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடர், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடரை 2-1 என இழந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளது.
ஷமிக்கு காயம்:
இதனிடையே, இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, வலைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த பிறகு ஒருநாள் தொடரில் ஷமி பங்கேற்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
Jaydev Unadkat to replace Mohammed Shami for Tests in Bangladesh
— ANI Digital (@ani_digital) December 10, 2022
Read @ANI Story | https://t.co/qoATb0mUXd#JaydevUnadkat #Shami #IndvsBan #Test #Cricket pic.twitter.com/UOE5EmroUo
ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாய்ப்பு:
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சை பெற்று வந்த முகமது ஷமி, இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் தான், டெஸ்ட் தொடரில் முகமது ஷமிக்கு பதிலாக, ஜெயதேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. விரைவில் தேவையன நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு, இரண்டு நாட்களில், வங்கதேசத்தின் சட்டோகிராமில் உள்ள இந்திய அணி உடன் உனத்கட் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனம் ஈர்த்த ஜெயதேவ் உனத்கட்:
31 வயதான ஜெயதேவ் உனத்கட் அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில், சவுராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை கைப்பற்றினார். அந்த தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை எடுத்ததோடு, நடப்பாண்டு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஜெயதேவ் உனத்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2010-11ல் நடைபெற்ற தென்னாப்ரிக்கா தொடரில் அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க, உனத்கட் விக்கெட் எதுவும் எடுக்காமல் 101 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தார். இந்நிலையில் தான், விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்டதின் மூலம், டெஸ்ட் போட்டியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அடுத்தடுத்து காயமடையும் இந்திய வீரர்கள்:
ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகியோரும், காயம் காரணமாக வங்கதேச தொடரில் பங்கேற்கவில்லை. ஷமியும் விலகிய நிலையில், ஒருநாள் தொடரின் போது கேப்டன் ரோகித் சர்மாவும் கையில் காயமடைந்து தாயகம் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.