(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SL: என்னதான் ஆச்சு இந்திய அணிக்கு? சொதப்பல் பேட்டிங்கை சரி செய்யுமா ரோகித் படை?
ரோகித், கோலி போன்ற ஜாம்பவான்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் இலங்கை அணி பாடம் புகட்டியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர் முடிந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
27 ஆண்டுகளுக்கு பின் சோகம்:
இதையடுத்து, ரோகித், கோலி, கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் என பெரும் பட்டாளத்துடன் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி களமிறங்கியது. இந்த தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எளிதில் வெல்லும் என்று எதிர்பார்த்த இந்திய அணிக்கு இலங்கை அணி பாடம் புகட்டியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி மிக மோசமாக தோல்வி அடைந்து தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இலங்கைக்கு எதிராக தொடரை இழந்துள்ளது.
கம்பீரின் பயிற்சி, ரோகித்- கோலி கம்பேக் என இருந்த அத்தனை எதிர்பார்ப்பும் முற்றிலும் ஏமாற்றத்தில் முடிந்தது. இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது பேட்டிங்கே ஆகும். போட்டி நடைபெற்ற கொழும்பு மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்வது சவாலான விஷயம் என்றாலும் இந்திய அணி ஆடிய விதம் மிகவும் மோசமாக இருந்தது.
சொதப்பல் பேட்டிங்:
முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தை அர்ஷ்தீப்சிங்கின் அலட்சியமான ஷாட்டால் டையில் முடிந்தது. அடுத்த நடந்த இரண்டாவது போட்டியில் மோசமாக ஆடிய இந்திய அணி நேற்று நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் மிக மோசமாக ஆடியது. இந்த ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவை தவிர யாருடைய பேட்டிங்கும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
சவாலான இந்த மைதானத்தில் ரோகித்சர்மா மட்டுமே அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் நிதானமாக ஆடினாலே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். சுப்மன்கில், விராட் கோலி, ரிஷப்பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொதப்பலாக ஆடினர். இந்திய அணியின் மிடில் ஆர்டர் எந்தளவு பலவீனமாக உள்ளது என்பதை இந்த தொடர் உணர்த்தியுள்ளது.
வாய்ப்பை வீணடித்த இளம் வீரர்கள்:
இளம் வீரர்களான ரியான் பராக், ஷிவம் துபே தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தனர். ஆனால் ரியான் பராக், ஷிவம் துபே பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். வாஷிங்டன் சுந்தர் மட்டுமே டெயிலண்டரில் சிறப்பாக ஆடினார்.
இந்திய அணி இந்த தொடரில் ரோகித்சர்மாவை மட்டுமே பேட்டிங்கில் நம்பியிருந்தது பட்டவர்த்தமாக கடந்த 3 போட்டிகளிலும் தெரிந்தது. மிடில் ஆர்டரில் அக்ஷர் படேல் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி ஆடினார். உடனடியாக இந்திய அணி தனது மிடில் ஆர்டர் சிக்கல்களை சரி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். மேலும், இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில் ஆட்டத்தை நின்று முடித்துக் கொடுக்கக்கூடிய ஃபினிஷர் தேவை. அவர்களுக்கு சவாலான மைதானத்தில் நின்று ஆடக்கூடிய மன உறுதியும், திறனும் தேவை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் தோனியைப் போன்ற ஒரு ஃபினிஷர் இந்திய அணிக்கு தேவை. அந்த பணியை ரியான் பராக் மற்றும் ஷிவம் துபே இந்த தொடரில் செய்யத் தவறிவிட்டனர். அவர்களை காட்டிலும் இந்த பணியை டி20 தொடரில் செய்து அசத்திய ரிங்குசிங்கிற்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்க வேண்டும்.
உத்வேகம் பெற்ற இலங்கை:
மேலும் முதன்மையான பந்துவீச்சாளரான முகமது சிராஜ் நேற்றைய போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். பும்ரா அளவிற்கு தரமான பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டியதும் இந்திய அணிக்கு அவசியம் ஆகும். மொத்தத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான இந்த தொடரை இழந்ததற்கு மோசமான பேட்டிங்கே காரணமாக அமைந்தது.
ரோகித், கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருந்தும் முழு பலத்துடன் களமிறங்கிய இந்திய அணியை அனுபவம் குறைந்த இலங்கை அணி சுருட்டி வெற்றி பெற்றது. இது அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்திருக்கும்.