Asia Cup Postponed: ஆசிய கோப்பை 2021 தொடர், 2023-ஆம் ஆண்டிற்கு மாற்றம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்து அணிகளும் பங்கேற்பது போன்ற ஒரு கால சூழல் இல்லாததால் தொடர் 2023-ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆசிய கோப்பை T20 கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இலங்கையில் ஜூன் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய பாதிப்பை இலங்கை மாகாணங்களில் ஏற்படுத்தியுள்ளதால் ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் நிர்வாகி ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு 2020-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெருவதாக இருந்த ஆசிய கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது, தற்போது இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆசிய கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஒத்திவைக்கப்படும் தொடர் 2023-ஆம் ஆண்டு நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தாண்டே நடத்த முயற்சி செய்ததாகவும் ஆனால் சர்வதேச அணிகளின் கிரிக்கெட் கேலண்டர் போட்டிகளால் நிரம்பி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அறிக்கையில் "கொரோனா பரவல் ஏற்படுத்தியுள்ள ஆபத்து மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக 2020ஆம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டிற்கு தொடரை ஒத்திவைத்தோம். இந்நிலையில் இந்தாண்டு போட்டிகளை நடத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சித்தோம், ஆனால் சர்வதேச கிரிக்கெட் அணிகள் அனைத்தும் பங்கேற்கும் வகையிலான ஒரு காலகட்டத்தை இந்தாண்டு கண்டறிய முடியவில்லை. அடுத்தாண்டு ஏற்கனவே ஆசிய கோப்பை தொடர் 2022ல் திட்டமிடப்பட்டுள்ளதால், இந்தாண்டு ஒத்திவைக்கப்படும் தொடர் 2023ம் ஆண்டு நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்து அணிகளும் பங்கேற்பது போன்ற ஒரு கால சூழல் இல்லாததால் போட்டிகள் 2023ம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடர் கடைசியாக 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொது இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தாண்டு நடைபெற திட்டமிடப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அந்த வரிசையில் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

