Vinayagar Chaturthi 2025: பக்தர்களே.. விநாயகர் சதுர்த்தியில் சாமி கும்பிட நல்ல நேரம் இதுதான் - நோட் பண்ணுங்க..
Vinayagar Chaturthi 2025 Nalla Neram: விநாயகர் சதுர்த்தி நன்னாளில் வீடுகளில் சாமி கும்பிட ஏற்ற நேரம் எது? என்பதை கீழே காணலாம்.

Vinayagar Chaturthi 2025 Nalla Neram: முழு முதற்கடவுளாக இந்து மார்க்கத்தில் போற்றி வணங்கப்படுபவர் விநாயகப்பெருமான். விநாயகப் பெருமான் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி:
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதன்படி, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகர் சிலைகள் வீதி உலா வருவதும், பக்தர்கள் பரவசத்தில் திளைப்பதும் என கோலாகலமாக இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் வீட்டில் எத்தனை மணிக்கு சாமி கும்பிட வேண்டும்? என்பதை கீழே காணலாம். பொதுவாக மற்ற பண்டிகைகள் எல்லாம் சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு கொண்டாடப்படும். ஆனால், விநாயகர் சதுர்த்தி மட்டும் சந்திரதோயத்தை கணக்கில் கொண்டு கொண்டாடப்படும்.
26ம் தேதியா? 27ம் தேதியா?
ஆகஸ்ட் 26ம் தேதி மாலை சந்திர உதய நேரத்தில் சதுர்த்தி திதி உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 4 மணிக்கு முன்பாகவே சதுர்த்தி திதி நிறைவடைந்து விடுகிறது. பொதுவாக, விநாயகர் சதுர்த்தி மாலை நேரத்திலே வணங்குவது வழக்கம். இதனால், பலருக்கும் 26ம் தேதியே சாமி கும்பிட வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வளர்பிறை சதுர்த்தி வழிபாட்டிற்கான சதுர்த்தி திதி ஆகஸ்ட் 27ம் தேதி சூரிய உதயத்தில்தான் வருகிறது. இதனால், ஆகஸ்ட் 27ம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை மாலையில்தான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சூரிய உதயம் விநாயகர் சதுர்த்தி நாளில் காலை 6.04 மணிக்கு இருக்கும்.
சாமி கும்பிட ஏற்ற நேரம் எது?
அன்றைய நாளில் காலையில் நல்ல நேரம் 9.15 மணி முதல் 10.15 மணி வரை உள்ளது. மதியம் 1.45 மணி முதல் 2.45 மணி வரை வருகிறது. கெளரி நல்ல நேரம் காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை வருகிறது. மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை வருகிறது. ராகு காலம் 12 மணி முதல் 1.30 மணி வரை வருகிறது. மாலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை வருகிறது.

நல்ல நேரம் வரும் 9.15 மணி முதல் 10.15 மணிக்குள்ளாகவோ அல்லது மதியம் வரும் 1.45 மணி முதல் 2.45 மணிக்குள்ளாகவோ சாமி கும்பிடுவது சிறப்பு ஆகும். பக்தர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் எமகண்டம் இல்லாத நேரத்தில் சாமி தரிசனம் செய்து கொள்வது மிகவும் உகந்தது ஆகும்.
படையல்:
வீட்டில் விநாயகர் சிலை அல்லது படத்தை சுத்தம் செய்து மாலை அணிவித்து வாழை இலையில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள், சுண்டல் படையலிட்டு வணங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களின் வீதிகளில் விநாயகர் சிலைகள் பல அடி உயரத்திற்கு பக்தர்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும். இதற்காக ஆயிரக்கணக்கில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், கரைப்பதற்கும், பொது இடத்தில் வழிபாட்டிற்கும் காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடக்கும். குறிப்பாக, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்படுவார்கள்.





















