Vastu tips for Home: வீட்டில் அமைதி இல்லையா? - கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
சில அறைகள் இட வசதி கருதி நீள் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் அதற்கேற்ப வாஸ்துச் செடிகளை வைத்து சரி செய்யலாம்.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொருவரும் பின்பற்றக்கூடிய ஒரு விதியாக பார்க்கப்படுகிறது. ஒருவரின் வெற்றி, தோல்விகளை நிர்ணயிப்பதில் வாஸ்து விதிகள் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. நிலம் சார்ந்த விஷயமான வாஸ்துவை கடைபிடிப்பதால் வாழ்க்கையில் மிக முக்கிய முன்னேற்றத்தைப் பெறலாம் என்பது ஐதீகமாகும். அப்படியான வகையில் குறைந்தப்பட்சம் ஒரு வீட்டில் நாம் பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள் என்னென்ன என்பது பற்றிக் காணலாம்.
ஒரு வீட்டை நீங்கள் கட்டும்போதோ அல்லது வாங்கும்போதோ அங்குள்ள அறைகள் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது சாஸ்திரத்தில் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. சில அறைகள் இட வசதி கருதி நீள் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் அதற்கேற்ப வாஸ்துச் செடிகளை வைத்து சரி செய்யலாம்.
அதேபோல் வீடு மற்றும் உள்ளே இருக்கும் அறைகளின் வாசற்கதவு திசை மிக முக்கியமானது. ஒரு வீட்டின் மெயின் நுழைவு வாயில் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு நோக்கி இருக்கலாம். எக்காரணம் கொண்டு தெற்கு திசையில் வீட்டின் வாசலை அமைக்கக்கூடாது. அதேசமயம் மேலே குறிப்பிடப்பட்ட 3 திசைகள் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நேர்மறையான ஆற்றலை குறிப்பதாகும். மேலும் வீட்டில் பெட்ரூம் இதே திசையில் அமைக்கலாம். அனைத்து திசைகளில் இருந்தும் வீட்டிற்குள் வெளிச்சம் வருமாறு இருக்க வேண்டும். அதற்கேற்ப வீட்டின் வண்ணத்தையும் தேர்வு செய்து பாசிட்டிவ் எண்ணங்களை பரவ செய்யலாம்.
வீட்டின் சமயலறை சாஸ்திரப்படி தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது மிகவும் சிறந்தது என சொல்லப்படுகிறது. அங்கு மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறங்களை வண்ணப்பூச்சுகளாக பயன்படுத்தலாம். அவை மங்களகரமானவை என நம்பப்படுகிறது. சமையலறையில் நிச்சயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும். இது எதிர்மறை ஆற்றலிலிருந்து விடுபட உதவும். அங்கு அடுப்பை தென்கிழக்கு திசையில் வைக்கலாம். அதேபோல் சமையலறை தண்ணீரும் நெருப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டாம்.
வீட்டின் குளியலறை மற்றும் கழிவறையை எக்காரணம் கொண்டும் வீட்டின் முன்வாசலுக்கு நேராக இருக்கும்படி செய்யக்கூடாது. இது நேர்மறை ஆற்றலை சீர்குலைக்கும். அதேசமயம் வடக்கு அல்லது தெற்கு திசையில் அதனை அமைக்கலாம். மேலும் தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய மூலைகளை தவிர்க்க வேண்டும். வீட்டின் குளியலறை கதவுகளை திறந்த நிலையில் வைத்திருக்கக்கூடாது. தண்ணீர் கசிவு, சுத்தமில்லாமல் வைத்திருப்பது ஆகியவையும் கூடாது.
வீட்டின் பால்கனி அமைப்பு வைத்திருந்தால் அதனை கிழக்கில் அமைக்கலாம். இது சூரியஒளி நேரடியாக நம் வீட்டில் வாசம் செய்ய உதவும். அங்கு பயன்படுத்தும் பொருட்கள் மரத்தால் செய்யப்பட்டிருப்பது பூமியை சமநிலைப்படுத்தி வீட்டில் அமைதியை ஊக்குவிக்கும்.





















