Thai Amavasai: நாளை தை அமாவாசை.. செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன?
2026ம் ஆண்டு தை அமாவாசையானது ஜனவரி 18ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்நாளில் நாம் கடைபிடிக்க வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னவென்றுப் பார்க்கலாம்.

இந்து மதத்தைப் பொறுத்தவரை வளர்பிறை மற்றும் தேய்பிறையை அடிப்படையாக கொண்டு 14 திதிகள் உள்ளது. தேய்பிறையின் உச்சம் அமாவாசையாகவும், வளர்பிறையின் உச்சம் பௌர்ணமியாகவும் பார்க்கப்படுகிறது. அதில் அமாவாசை முன்னோர்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட நாளாக உள்ளது. இந்நாளில் நம் குடும்பத்தில் மறைந்த பெரியவர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து, அவர்களுக்கு பிடித்த பொருட்களை படையலிட்டு வலிபட்டால் நம்முடைய குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாகவும், என்றைக்கும் முன்னோர்களின் நிழலில் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
வருடத்திற்கு 12 அமாவாசைகள் வரும் நிலையில் தை, புரட்டாசி, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பித்ரு உலகத்தில் இருந்து பூலோகத்தில் நம்மை காண ஆடி மாதத்தில் முன்னோர்கள் புறப்படுவார்கள். அவர்கள் புரட்டாசி மகாளய அமாவாசையில் பூலோகத்தில் தங்கி மீண்டும் தை அமாவாசை நாளில் பித்ரு உலகத்திற்கு திரும்புகிறார்கள். அதனால் தான் இந்த அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
2026ம் ஆண்டு தை அமாவாசையானது ஜனவரி 18ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்நாளில் நாம் கடைபிடிக்க வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னவென்றுப் பார்க்கலாம்.
செய்ய வேண்டியவை
- முதலில் இந்நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அருகில் உள்ள ஏதேனும் நீர் நிலைகளில் அல்லது வீட்டிலேயே எள்ளும் நீரும் இறைத்து முன்னோரை வணங்கலாம்.
- இந்த நாளில் நம்மால் முடிந்த அளவுக்கு தானம் செய்யலாம். அது எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் அருகிலுள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று எள் தீபம் ஏற்றலாம்.
- இன்றைய நாளில் தர்ப்பணம், திதி கொடுக்க முடியாதவர்கள் குறைந்தப்பட்சம் முன்னோர் படங்களை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து படையலிட்டு வழிபட வேண்டும்.
- கோதுமைத் தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை பசுவிற்கு தானம் செய்யலாம். மேலும் காகத்திற்கு உணவு வைத்து, அமாவாசை விரதம் கடைபிடிப்பவர்கள் அதனை முடித்த பிறகே வீட்டில் இருப்பவர்கள் உணவருந்த வேண்டும்.
- முடிந்தவரை அன்று அருகிலுள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
செய்யக்கூடாதவை
- முன்னோர்களுக்கான இந்நாளில் வீட்டில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. மாலை நேரத்தில் அதனை மேற்கொள்ளல்லாம்.
- இந்த நாளில் அசைவம் சாப்பிடக்கூடாது.
- இந்நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருட்களை பிறரிடம் கடன் வாங்கக்கூடாது.
- இயலாத நிலை இருந்தால் தவிர, தர்ப்பணம் கொடுக்காமல் தவிர்க்ககூடாது.
- அன்றைய நாளில் வாசலில் கோலமிடக்கூடாது. கிழக்கு திசை பார்த்து தான் அமர்ந்து கோலமிட வேண்டும்.
- இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது.





















