சங்கடஹர சதுர்த்தி: மாயூரநாதர் கோயில் ஸ்ரீ மகா கணபதி சன்னதியில் கஜ பூஜை
மயிலாடுதுறையில் சங்கடஹர சதுர்த்திவிழாவை முன்னிட்டு பழமைவாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் ஸ்ரீ மகா கணபதி சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கஜ பூஜை நடைபெற்றது.
செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்தால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு மிக்க செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி நேற்று மயிலாடுதுறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் உள்ள பழமையான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் ஶ்ரீ மகாகணபதி தனிசன்னதி உள்ளது. இங்கு 9 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகராக ஸ்ரீ மகா கணபதி எழுந்தருளியுள்ளார். நேற்று சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மகா கணபதி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பால், சந்தனம், இளநீர், தேன், உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கஜபூஜை நடைபெற்றது. அதில் மாயூரநாதர் ஆலய கோயில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்து, யானை அபயாம்பிகையிடம் ஆசிர்வாதம் பெற்றனர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ஆபத்து காத்த விநாயகர், உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.