கடன் பிரச்னை தீர, வழக்குகளில் வெற்றி கிடைக்க இந்த கோயிலுக்கு போய்ட்டு வாங்க - முழு விவரம் உள்ளே....!
கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார்
லட்சுமி நரசிம்ம பெருமாள் (Lakshmi Narasimha Perumal Temple)
விழுப்புரம் (Villupuram) மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி, தாயார், பெருமாளை நோக்கி கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் படி வேண்டி கொண்டார். அதன்பேரில் சாந்த மூர்த்தியாக பிரகலாத வரதனாக பெருமாள் காட்சி தந்தார். எனவே இந்த தலத்தில் தற்போதும் பக்தனுக்காக தாயார் கும்பிட்ட நிலையில் நரசிங்க பெருமாளோடு காட்சி அளித்து வருகிறார்.
நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது!
இந்த தலத்தில், நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி, அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது. இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள், இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தினர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், அரக்கர் களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார்.
நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார்
அதன்படி அனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின் வேள்வி தடையின்றி நடைபெற அருள் பாலித்தார். இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தின் அருகில் நரசிம்மரை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார். மூலவர் லட்சுமி நரசிங்கப்பெருமாள் அமர்ந்த கோலத்தில், தனது இடது தொடைமீது மகாலட்சுமியை அமரச் செய்துள்ளார். தாயார் கனகவல்லி தனி சன்னதியில் உள்ளார். உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.
கடன் பிரச்சினை அகலும்
இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.
தினமும் 2 கால பூஜைகள்
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகுதிசை நடப்பவர்களுக்கும், ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த கோவில் பரிகார தலமாக உள்ளது. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தாயார் சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஆண்டாள் சன்னதியும், பின்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், வேணுகோபாலர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடந்து வருகிறது.