Sattanathar Temple: மே 24 ம் தேதி மகா கும்பாபிஷேகம்.. சட்டைநாதர் கோயிலில் தொடங்கிய யாகசாலை பூஜைகள்..!
சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் யாகசாலை பூஜைகள் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற மே 24 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
சட்டைநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில், இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22 -ஆம் தேதி பரிவார மூர்த்தி களுக்கு கும்பாபிஷேகமும், 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 -ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று முன்தினம் உப்பனாற்றில் இருந்து குதிரை, ஓட்டங்கள் உள்ளிட்ட மங்கள சின்னங்கள் முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்கு நான்கு யானைகள் மீது கடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து மாலை மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. பின்னர் 8 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றனர். யாகசாலை பூஜையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் புதன் கிழமை காலை எட்டாம் யாகசாலை பூஜை நிறைவு பெற்று யாகசாலையில் இருந்து கடன்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக நடைபெற உள்ளது