சிறுகுழந்தைகளை அம்மனாக பாவித்து மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிறுகுழந்தைகளை அம்மனாக பாவித்து, சிறப்பு பூஜையும், வசுந்தரா பூஜை, தம்பதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, ருத்ர சண்டி ஹோமங்களும் நடைபெற்றன
தெய்வ வழிபாட்டுக்குரியதாக கூறப்படும் மார்கழி மாதம் தற்போது நடைபெற்று வருவதை அடுத்து, மயிலாடுதுறை கௌரீ மயூரநாதர் கோயிலில், வேதசிவபுரம் பாடசாலை மாணவர்களால் ருத்ர ஜப, தேவி மஹாத்மீய பாராயணம் கடந்த மார்கழி ஒன்றாம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. சுவாமி சன்னதியில் ருத்ரபாராயணமும், அம்பாள் சந்நதியில் தேவி மஹாத்மீயமும் வாசிக்கப்பட்டு வந்தது.
இறுதி நாளான இன்று ஆலயத்தில், சம்ஹன் எனப்படும் வேதங்களை கூறிக்கொண்டு வாழை மட்டை மூலம், யாக குண்டத்தில் நெய்யை வார்த்துக்கொண்டே செய்யப்படும் வசுந்தரா பூஜை, ருத்ர ஹோமம், சண்டி ஹோமம், மூலமந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றன. மேலும் சிறுமிகளை அம்பாளாக பாவித்து நடத்தப்படும் கன்னிகா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வயதான தம்பதியினரை இறைவனாக எண்ணி பூஜை, தம்பதி பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு கலசபூஜை நடைபெற்றது. பின்னர் கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை செய்யப்பட்டது. இதில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இறுதியாக பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பெருஞ்சேரி வாகீஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு 5 யாக குண்டங்கள் அமைத்து பஞ்சாக்னி ஹோமம்செய்து புனித நீரால் சுவாமி அம்பாள் மற்றும் குரு பகவானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பெருஞ்சேரியில் பஞ்ச குருஷேத்திரங்களில் 5 -வது ஷேத்திரமான வாக்கு நல்கும் வள்ளலான வாகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வியாழன் கிரகம் தேவர்களுக்கெல்லாம் குருவாகும் பேறு வேண்டுமென 14 ஆண்டுகள் தவம்புரிந்து சிவபெருமானிடம் வரம் கேட்டபோது, பெருஞ்சேரி சென்று சிவவழிபாடு செய்ய ஆணையிட்டதாகவும், அதன்படி வியாழன் பெருஞ்சேரியை அடைந்ததும் பெருமான் அவருக்கு லிங்கவடிவில் காட்சியளித்து அருளியதாகவும், இதையடுத்து, வியாழன் அனைத்து கிரகங்களுக்கும் தேவ குருவானதாக ஐதீகம்.
படைபலத்தைவிட தெய்வபலத்தை நம்பிய தத்தசோழ மன்னனுக்கு அம்பாள் வெற்றியை தந்த தலம். சரஸ்வதிதேவி தன் பெயரால் லிங்கம் அமைத்து விதிப்படி பூசித்து தக்கன் யாகத்தில் வீரபத்திரனால் இழந்த மூக்கினை பெற்று வாக்கு வன்மையும் பெற்ற தலமாக போற்றப்படுகிறது. இவ்வாறான சிறப்புகள் பல வாய்ந்த இக்கோயிலில் மார்கழி மாத பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு பஞ்சாக்னி ஹோமம் நடைபெற்றது.
அதற்காக கோயில் பிரகாரத்தில் புனிதநீர் அடங்கிய மூன்று கடங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஐந்து யாக குண்டங்கள் அமைத்து பஞ்சாக்னி ஹோமம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை சுற்றி வந்து சுவாமி, அம்பாள் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகளை, ஆலய குருக்கள் சாம்பசிவம் குருக்கள், கோவை ஆறுமுகம் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.