கோழிகுத்தியில் வைகுண்ட ஏகாதசி: 14 அடி உயர அத்தி மர வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..
மயிலாடுதுறை அருகே வைகுண்ட ஏகாதசியை அடுத்து பிரசித்தி பெற்ற கோழிகுத்தி 14 அடி உயர அத்தி மர வானமுட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை: மார்கழி மாதத்தின் மிக முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயத்தில் காலை இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா... கோவிந்தா..." என முழக்கமிட்டு பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புகள்
மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தின் மிக முக்கிய சிறப்பு என்னவென்றால், மூலவர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமாக, ஒரே அத்தி மரத்தினால் உருவானவர் ஆவார்.
* புராணப் பின்னணி: இத்தலம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் தனது விஸ்வரூப தரிசனத்தை வழங்கிய புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.
*தோஷ நிவர்த்தி தலம்: பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடிஹத்தி தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்ட தலம் என்பதால், இது 'கோடிஹத்தி பாப விமோசன தலம்' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி தற்போது 'கோழிகுத்தி' என வழங்கப்படுகிறது.
* சனி கவசம்: பிப்பல மகரிஷி இத்தலத்தில் வழிபட்டு தான் 'சனி கவசம்' பாடியதாகத் தல வரலாறு கூறுகிறது.
* கல்வெட்டு ஆதாரங்கள்: கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. குறிப்பாக, மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த ஆலயத்திற்கு வழங்கிய கொடைகள் குறித்த விரிவான தகவல்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
வைகுண்ட ஏகாதசி விழா
இத்தகைய ஆன்மிக சிறப்புகள் பல வாய்ந்த இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
* பரமபத வாசல் திறப்பு: ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அவருக்குத் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, காலை 5:30 மணியளவில் பரமபத வாசல் வழியாகப் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
* மூலவர் வழிபாடு: 14 அடி உயர அத்தி மர மூலவர் வானமுட்டி பெருமாளுக்குத் தைலக் காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது.
* பக்தர்கள் தரிசனம்: மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கோயில் நிர்வாகத்தினரும் காவல்துறையினரும் இணைந்து செய்திருந்தனர்.
இந்த மார்கழி மாதத்திலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது வைகுண்ட ஏகாதசி ஆகும். வைகுண்ட ஏகாதசி பிறக்கும் நாளின் முந்தைய இரவு முழுவதும் விழித்திருந்து வைகுண்ட ஏகாதசி பிறக்கும் அந்த அதிகாலையில் சொர்க்கவாசலை தரிசனம் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி இன்று காலை தொடங்கியது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டனர். சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசனம் செய்த பக்தர்களுக்குத் துளசி தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.






















