ஐயாரப்பர் கோயில் தை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!
மயிலாடுதுறையில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் ஆலயத்தில் தை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஶ்ரீஐயாரப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நாதசன்மா, அனவித்தை ஆகிய சிவபக்தர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்புக்குரியதாகும். இவ்வாலயத்தில் தை மாத பிரதோஷ வழிபாடு நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு கோயில் வாயில் முன்பு எழுந்தருளியுள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், நந்தி பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திய பெருமானுக்கு செய்யபட்ட பிரதோஷ அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்தனர்.
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 14 அடி உயர அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள் ஆலய, தை பிரம்மோற்சவ விழாவில் வானமுட்டி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி நடைபெற்ற சுவாமி புறப்பாடில் வீடுகள் தொறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு சனி கவசம் பாடிய இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த ஆலயத்திற்கு வழங்கிய கொடைகள் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகளும், பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தை பிரமோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீ தேவி சமேதராய் உள்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கொடி மரத்திற்கு எதிரே எழுந்தருளிய பெருமாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது அதனை அடுத்து செப்பு தகடுகள் பதிக்கப்பட்ட ஆலய கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றிரவு ஶ்ரீ கருட சேவை புறப்பாடு திருவீதிஉலா நடைபெற்றது. வானமுட்டி பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டு புண்யாஹம், சங்கல்பம், ஹோமங்கள் பூர்ணாகுதி, திருவாராதணம், தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, பெருமாள் ஶ்ரீ கருடசேவை திருவீதியுலா நடைபெற்றது. அப்போது வீடுகள் தோறும் வாசல் தெளித்து கோலமிட்டு அர்ச்சனை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சுவாமி புறப்பாடுக்கு முன்னதாக ஆலயத்தின் எட்டு திக்கிலும் சக்கரத்தாழ்வார் எழுந்தருள திக்பலி அளிக்கப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றும் வரும் 22 -ஆம் தேதி தேர் உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது.