Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: இன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Maha Shivratri 2025: அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். பிரதோஷம், கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம் போன்ற சிவனுக்கு மிகவும் உகந்த நாட்களைப் போல மகாசிவராத்திரியும் மிகவும் முக்கியமான நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி சிவ பக்தர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இன்று மகாசிவராத்திரி:
நடப்பாண்டிற்கான மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளே மகாசிவராத்திரி ஆகும். மகாசிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாகவே சிவாலயங்கள் களைகட்டி காணப்பட்டது. இன்று மகாசிவராத்திரி என்பதால் காலையிலே சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் தொடங்கியுள்ளது. பக்தர்கள் காலை முதலே கோயிலில் குவிந்து வருகின்றனர்.
சதுர்த்தசி திதி காலை 10.18 மணிக்கு பிறக்கிறது. இந்த திதியானது நாளை காலை 9.01 மணி வரை உள்ளது. சதுர்த்தசி திதி இன்று பிறப்பதால் இன்று இரவே பக்தர்கள் கண்விழிக்க வேண்டும்.
நான்கு கால பூஜை:
மகாசிவராத்திரியின்போது எப்போதும் சிவபெருமானுக்கு நான்கு கால பூஜை நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த நான்கு கால பூஜை மாலை 6 மணிக்குத் தொடங்கி நாளை காலை 6 மணி வரை நடக்கிறது. இந்த நான்கு கால பூஜையில் பங்கேற்க பக்தர்கள் மாலை முதல் அதிகளவு சிவாலயங்களில் குவிவார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரபலமான சிவாலயங்கள் அனைத்திலும் இன்று மாலை முதல் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவு குவிவார்கள். மகாசிவராத்திரி இரவில் கண்விழித்து சிவபெருமானை வணங்கினால் ஏராளமான நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
குவியும் பக்தர்கள்:
சிவ பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் பக்தர்களின் வசதிக்காகவும், சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், வடபழனி வேங்கீஸ்வரர் கோயில் உள்பட சிவன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இன்று மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள சிவாலயங்களிலும் இன்று இரவு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரக்யாராஜில் நடக்கும் மகா கும்பமேளாவும் சிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது.