Maha Shivaratri 2025: மகாசிவராத்திரி! இரவில் கண்விழிக்க வேண்டியது 26ம் தேதியா? 27ம் தேதியா?
Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ள நிலையில் பக்தர்கள் 26ம் தேதி கண்விழிக்க வேண்டுமா? அல்லது 27ம் தேதி கண்விழிக்க வேண்டுமா? என்பதை கீழே காணலாம்.

Maha Shivaratri 2025: அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக திகழ்வது மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
மகாசிவராத்திரி எப்போது?
நடப்பாண்டிற்கான மகாசிவராத்திரி வரும் பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் 26ம் தேதி காலை 10.18 மணிக்கு சதுர்ததி திதி பிறக்கிறது. அப்போது முதல் அடுத்த நாளான பிப்ரவரி 27ம் தேதி காலை 9.01 மணி வரை சதுர்த்தசி திதி வருகிறது.
பொதுவாக, ஒரு நாள் பிறக்கும்போது எந்த திதி உள்ளது அந்த திதியே அந்த நாள் முழுவதும் கணக்கில் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால் சதுர்த்தசி திதி பிப்ரவரி 27ம் தேதி சூரிய உதயத்தின்போதுதான் கணக்கில் வரும். இதன்படி பார்த்தால் பிப்ரவரி 27ம் தேதியே மகாசிவராத்திரி கணக்கில் கொள்ளப்படும்.
கண்விழித்திருக்க வேண்டியது 26ம் தேதியா? 27ம் தேதியா?
மகாசிவராத்திரி என்றால் அன்றைய தினத்தின் இரவில் பக்தர்கள் கண்விழித்து சிவாலயங்களில் நடக்கும் சிவ பூஜையில் பங்கேற்பது வழக்கம். அவ்வாறு கண் விழித்திருக்க வேண்டியது 26ம் தேதி இரவே ஆகும். ஏனென்றால், மாசி மாத சதுர்த்தசி திதியில்தான் கண்விழித்திருக்க வேண்டும்.
அதன்படி, பார்த்தால் 26ம் தேதி இரவுதான் மாசி மாத சதுர்த்தசி திதி ஆகும். இதனால், பக்தர்கள் 26ம் தேதி இரவுதான் கண்விழித்து சிவபெருமானுக்கு பூஜை செய்ய வேண்டும். மேலும், சிவராத்திரி தினத்தில் பூஜை செய்பவர்கள் 26ம் தேதியே செய்ய வேண்டும். மேலும், சிவாலயங்களில் வரும் பிப்ரவரி 26ம் தேதி இரவு நடக்கும் நான்கு கால பூஜையில் பங்கேற்று ஈசனை மனதார வழிபட வேண்டும்.
களைகட்டும் சிவாலயங்கள்:
மகாசிவராத்திரி தினத்தில் இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்கள் களைகட்டி காணப்படும். அன்றைய நாளில் உலகம் முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் சிவாலயங்களுக்கு சென்றோ, வீட்டில் சிவபெருமானுக்கு பூஜை செய்தோ சிறப்பு செய்வார்கள்.
மகாசிவராத்திரிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் தற்போது முதலே சிவாலயங்கள் களைகட்டி காணப்படுகிறது. புகழ்பெற்ற திருவண்ணாமலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவாலயங்கள் அனைத்தும் தற்போது முதலே மகாசிவராத்திரிக்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

