மயிலாடுதுறையில் ஒரே நாளில் 6 கோயில்களில் வெகு விமரிசையாக நடந்த கும்பாபிஷேக விழா!
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கோழிகுத்தி கிராமத்தில் 6 கோயில்களிலும், அரும்பூர் ஒரு கோயிலும் இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கோழிகுத்தி கிராமத்தில் ஒரே அத்தி மரத்தில் நின்ற கோலத்தில் 14 அடி உயரமுள்ள ஸ்ரீ வானமுட்டி பெருமாள், அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள், அருள்மிகு சபாபதிஸ்வரர், ஸ்ரீ ராமர் மடம், அருள்மிகு மன்மதீஸ்வரர், அருள்மிகு உத்திராபதீஸ்வரர், அருள்மிகு தில்லைமா காளியம்மன் ஆகிய 7 பழமையான திருக்கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டது. இன்று 6 கோயில்களில் கும்பாபிஷேகமும், அடுத்த மாதம் செப்டம்பர் 9-ம் தேதி புகழ்வாய்ந்த ஸ்ரீ வானமுட்டி பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
முன்னதாக இன்று நடைபெற்ற ஆறு கோயில்களின் கும்பாபிஷேக பெரு விழாவை முன்னிட்டு கடந்த 26 -ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. வாஸ்து சாந்தியுடன் துவங்கிய முதல் கால யாகசாலை பூஜையில், யாகசாலா பிரவேசம் நடைபெற்றது. கோயில்களில் இருந்து சுவாமிகளை கலசத்தில் ஆவாகனம் செய்து யாகசாலையில் எழுந்தருள செய்ய மூல மந்திர ஓத செய்து கடஸ்தாபனம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடங்களை யாகசாலைக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூரணாகுதி நடைபெற்று, மகாதீபாராதனை செய்யப்பட்டது. இதில் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை அடுத்து இன்று காலை நான்காம் காலயாக சாலை பூஜைகள் நிறைவுற்று மேளதாள வாத்தியங்கள் முழங்க வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத தியாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பட்டு கோயில்களை சுற்றி வலம் வந்து விமான கலசங்களை அடைந்தது அதனைத் தொடர்ந்து புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு 6 கோயில்களின் கும்பாபிஷேகமும் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏழாவது கோயிலாக ஒரே அத்தி மரத்திலான 14 அடி உயரமுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ வானமுட்டி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அக்னிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சிதலமடைந்த இக்கோவில் புனரமைக்கப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
தினசரி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் மகா பூர்ணாஹூதி மற்றும் மகாதீபாராதனை செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வான வேடிக்கைகள் ஒலிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.