டபுள் விசேஷம் இன்று! ஆடிக்கிருத்திகை.. கிருஷ்ண ஜெயந்தி..! அற்புதமான ஆடி மாத கடைசி நாள்!
ஆடி மாத கடைசி நாளான இன்று கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும், முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையும் ஒரு சேர கொண்டாடப்படுகிறது.

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்றாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தின் கடைசி நாள் இன்று ஆகும்.ஆடி மாதம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடிய நிலையில், இந்த கடைசி நாள் மிக மிக முக்கியமான நாளாக அமைந்துள்ளது.
ஆடிக்கிருத்திகை, கிருஷ்ண ஜெயந்தி:
சனிக்கிழமையான இன்று கிருஷ்ணர் அவதரித்த நாளான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையும், முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையும் ஒரு சேர கொண்டாடப்படுகிறது. இது மிக மிக சிறப்பு வாய்ந்த நாளாக பக்தர்களால் கருதப்படுகிறது.

காக்கும் கடவுளாக போற்றப்படும் மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் ஆவணி தேய்பிறை அஷ்டமி. ரோகிணி நட்சத்திர நாளில் அவதரித்ததாகவே புராணங்களில் கூறப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி இன்றும், ரோகிணி நட்சத்திரம் நாளையும் வருவதால் இன்றே கிருஷ்ண ஜெயந்தி பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.
கோகுலாஷ்டமி கொண்டாட்டம்:
கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்ப்டுகிறது. தமிழ்நாட்டிலும் சமீபகாலமாக சிறப்பாக காெண்டாடப்பட்டு வருகிறது. வைணவ தலங்களான புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பல கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம்.
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு வீடுகளிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் பக்தர்கள் மேற்கொள்வார்கள். கிருஷ்ணர் படத்திற்கு மாலைகள் அணிவித்து லட்டு, நெய் போன்ற இனிப்புகள் படைப்பார்கள். வட இந்தியாவில் உறியடி போட்டி நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாட்டிலும் சில இடங்களில் நடத்தப்படும். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் தரித்து வீடுகளில் குழந்தைகளை நடக்க வைப்பார்கள்.
முருகன் கோயில்களில் குவியும் பக்தர்கள்:
கிருஷ்ணருக்கு உகந்த கிருஷ்ண ஜெயந்தி ஒருபுறம் என்றால் முருகப்பெருமானுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை இன்று கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் ஆடிக்கிருத்திகையாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு வந்த ஆடி மாதத்தில் இரண்டு ஆடிக்கிருத்திகை வந்தது. ஏற்கனவே ஜுலை 18ம் தேதி ஒரு ஆடிக்கிருத்திகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்றும் ஆடிக்கிருத்திகை வருகிறது. கிருஷ்ண ஜெயந்தியுடன் வரும் ஆடிக்கிருத்திகை என்பதால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

இதையடுத்து, காலை முதலே முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளிலும் இன்று சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்து வருகிறது. பக்தர்கள் இங்கு காலை முதலே அதிகளவில் குவிந்து வருகின்றனர். சென்னையிலும் வடபழனி உள்ளிட்ட முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. தமிழ்க் கடவுளான முருகனுக்கு மிகவும் உகந்த நாளான ஆடிக்கிருத்திகையில் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வது சிறந்தது ஆகும். இதனால் காலை முதலே பக்தர்கள் பலரும் விரதம் இருந்து வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு:
பக்தர்கள் வசதிக்காக போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் விடுமுறை என்பதாலும், ஆடிக்கிருத்திகை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டும் ஒரு சேர வந்திருப்பதாலும் கோயில்களில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் காணப்படும் என்று கருதப்படுகிறது. திருவண்ணாமலை உள்ளிட்ட இதர புகழ்பெற்ற கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.





















