Krishna Jayanthi 2024: "பாலகிருஷ்ணர் முதல் பார்த்தசாரதி வரை" - கிருஷ்ணரின் 8 கோலங்கள் என்னென்ன? பக்தர்களே படிங்க!
Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணரின் 8 கோலங்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றாக திகழ்வது கிருஷ்ணர் அவதாரம். கம்சனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் கிருஷ்ணர் அவதாரம். கிருஷ்ணர் பொதுவாக 8 கோலங்களில் காட்சி தருகிறார். அது என்னென்ன என்பதை கீழே விரிவாக காணலாம்.
சந்தான கோபால கிருஷ்ணர்:
தனது வளர்ப்புத் தாயான யசோதையின் மடியில் அமர்ந்த கோலத்தில் கிருஷ்ணர் காட்சி தருவது சந்தான கோபால கிருஷ்ணர் என்று அழைக்கப்படுகிறார்.
பால கிருஷ்ணர்:
கிருஷ்ணர் குழந்தை வடிவத்தில் தவழ்ந்து செல்வது போல காட்சி தரும் கோலம் பாலகிருஷ்ணர் கோலம் என்று அழைக்கப்படுகிறது.
காளிய கிருஷ்ணன்:
யமுனை நதியில் உள்ளே இருந்த காளிங்கன் எனும் பாம்பின் மீது கிருஷ்ணர் நடனமாடி காளிங்கனின் ஆணவத்தை அடக்கி அதை அந்த இடத்தில் இருந்து அகற்றுவார். அந்த காளிங்கன் பாம்பு மீது கிருஷ்ணர் ஆடிய நடனமே காளிங்க நர்த்தனம் என்று கூறப்படுகிறது. காளிங்க நர்த்தன கோலத்தில் கிருஷ்ணர் காட்சி தருவதே காளிய கிருஷ்ணன் என்று கூறப்படுகிறது.
கோவர்த்தனதாரி:
ஒட்டுமொத்த ஊரும் இடி, மின்னலுடன் கூடிய பெருமழையால் உயிர் பயத்துடன் இருந்தபோது கோவர்த்தனமலையை கிருஷ்ணர் தனது ஒற்றை விரலால் தூக்கி நிறுத்தி, அதன் கீழ் பசுக்கள், மனிதர்கள் என அனைத்து உயிர்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. அந்த கோலமே கோவர்த்தனதாரி கோலம் ஆகும்.
ராதா கிருஷ்ணன்:
ராதையுடன் கண்ணன் காட்சி தரும் கோலமே ராதாகிருஷ்ணன் கோலம். அதுவும் வலது காலை சிறிது மடித்து, இடது காலை முன்புறம் வைத்து அருகிலே ராதையுடன் இருப்பது போலவும், கைகளில் புல்லாங்குழல் ஊதுவதுபோலவும் காட்சி தருவார். இதுவே ராதாகிருஷ்ணர் கோலம் என கூறப்படுகிறது.
முரளீதரன்:
கிருஷ்ணப் பெருமாள் தனது மனைவிகளான சத்தியபாமா மற்றும் ருக்மணியுடன் இணைந்து காட்சி தரும் கோலமே முரளீதரன் கோலம்் ஆகும். நான்கு கைகளுடன் அவர் காட்சி தருகிறார்.
மதனகோபால்:
முரளீதரனாக காட்சி தரும் கிருஷ்ணர் மதனகோபாலராக காட்சி தருகிறார்.
பார்த்தசாரதி:
மகாபாராதத்தில் கிருஷ்ண பெருமாள் அர்ஜூனனுக்கு செய்யும் உபதேசமே பகவத் கீதை எனப்படுகிறது. அவ்வாறு அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் சாரதியாக சென்று உபதேசம் செய்யும் கோலமே பார்த்தசாரதி கோலம் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணரின் மேலே கூறிய 8 கோலங்களில் ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு கோலத்திலும் அவர் காட்சி தருகிறார்.