கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிவனடியார்கள் தர்ணா - காரணம் என்ன?
நடராஜர் அபிஷேகம் பார்த்த பிறகுதான் செல்வோம் எனக் கூறி சிவனடியார்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நடராஜர் சிலைக்கு பாலாலயம் செய்து இருப்பதால் நடராஜர் படத்துக்கு பூஜை நடத்தியதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் கடந்த ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் சிலையை வீதி உலா எடுத்துச் சென்ற போது சிலை உடைந்து சேதமானது. இந்நிலையில் நேற்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது.
ஆனால், அபிஷேகம் நடைபெறவில்லை எனக்கூறி, மூன்றடி உயரம் உடைய ஐம்பொன் உற்சவர் சிலையான நடராஜர் சிலையை காணவில்லை என சிவனடியார்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடராஜர் அபிஷேகம் பார்த்த பிறகுதான் செல்வோம் எனக் கூறி அவர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஓதுவார் தண்டபாணி, மாலை 6 மணியளவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும் போதே நடராஜர் படத்துக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு விட்டதாகவும், புதிதாக நடராஜர் சிலை செய்ய பாலாலயம் செய்யப்பட்டு விட்டதால் நடராஜர் படத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.