மயிலாடுதுறையில் கோயில்கள் முன்பு கொளுத்தப்பட்ட சொக்கப்பனை - பரவசத்தில் பக்தர்கள்
திருக்கார்த்திகை தீபத்திருநாளை அடுத்து கோயில்களும், வீடுகள் அகல்விளக்கு ஏற்றி சொக்கப்பனை கொளுத்திய பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. இந்த நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். கார்த்திகை தீப திருநாள் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருகார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும், கோயில்களிலும், பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். தீபத் திருநாளில் தீபமேற்றி வழிபட்டால் அன்னை மகாலட்சுமி வீடுகளில் குடியேறுவாள் என்பது பொதுமக்கள் நம்பிக்கை. குத்துவிளக்கு, அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வவளம் பெருகும் தீபச்சுடரில் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர் வீட்டில் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை தீபத்திருநநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களுது வீட்டு வாசலில் வண்ணகோலமிட்டு குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, அவல்பொறி, பழங்கள் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். தீப திருநாளை முன்னிட்டு மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்கள் என பல்வேறு பகுகளில் வீடுகள், தெருக்கள் தீப ஒளியால் பிரகாசித்தன. அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் கம்பி மத்தாப்பு, சங்குசக்கரம், புஷ்வானங்கள் மற்றும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடினார்.
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் திருக்கார்த்திகை தீப திருநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிவபெருமான் அடி, முடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்த ஐதீகத்தை நினைவூட்டும் ஐதீகத் திருவிழாவாக கார்த்திகை திருநாளில் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றப்படுவது வழக்கம். இவ்விழா முருகன் கோயில், அம்மன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களிலும் நடத்தப்படும். பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், முக்தி நிலையை அடையலாம் என்பதை விளக்கும் விதமாகவும் கார்த்திகை தீப திருநாளில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. பல்வேறு சிறப்புகள் கொண்ட கார்த்திகை தீபதிருநாளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சுவாமி சன்னதிகளில் மகா தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று உபகோயில்களில் சொக்கபனை ஏற்றப்பட்டது. இதுபோல் புதுத்தெரு ஶ்ரீ மகாகாளியம்மன் ஆலயம், பாண்டுரெங்கர் பஜனைமடம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதுபோன்று கார்த்திகையை முன்னிட்டு பாடல் பெற்ற குத்தாலம் ஸ்ரீ அரும்பன்னவனமுலையம்மை, ஸ்ரீ பரிமளசுகந்தநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதிஸ்வரர் சுவாமி திருக்கோயில், சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், வைத்தீஸ்வரன் வைத்தியநாத சுவாமி திருக்கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சிவாலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.