Karthigai Deepam: கார்த்திகை தீபம்.. வீட்டில் எங்கு விளக்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?
ஆன்மிக நம்பிக்கையின்படி வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் அமைதி, செல்வ செழிப்பு, மகிழ்ச்சியான இல்வாழ்க்கை என ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

கார்த்திகை மாதம் பிறந்து விட்ட நிலையில் பலரும் கார்த்திகை தீபத் திருநாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அதன்படி 2025ம் ஆண்டு திருக்கார்த்திகை டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வீட்டில் உள்ள அத்தனை விளக்குகளும் சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து வரும். அகல் விளக்குகள் தொடங்கு குத்து விளக்கு வரை தீபமேற்றி அன்றைய நாள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும். அதேசமயம் ஆன்மிக நம்பிக்கையின்படி வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் அமைதி, செல்வ செழிப்பு, மகிழ்ச்சியான இல்வாழ்க்கை என ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
எங்கு விளக்கேற்றினால் என்ன பலன்?
வீட்டின் பிரதான வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பது அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தரும் என நம்பப்படுகிறது. அதேசமயம் பால்கனி, ஜன்னல்களில் விளக்கேற்றி வழிபட்டால் வெளியிலிருந்து வரும் இருள் நீங்கி நம் வீட்டுக்குள் ஒளியும், நேர்மறை ஆற்றலும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. வீட்டின் பூஜையறையில் குத்து விளக்கு மட்டுமல்லாமல் அகல் விளக்குகளையும் அலங்கரிக்க வேண்டும். அதனை பூக்கள் கொண்டு வண்ணமயமாக அலங்கரித்து வழிபடுவது இறைவன் நம் வீட்டில் வாசம் செய்துள்ளான் என்பதற்கு அடையாளமாகும்.
கடந்த வருடம் வாங்கிய அகல் விளக்கை பலரும் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒற்றை எண்ணிக்கையில் புதிய விளக்குகளை வாங்க வேண்டும். பழைய அகல் விளக்குகளை சுத்தம் செய்ய கொதிக்கும் நீரில் சிறித்து சோப்பு பவுடர் போட்டு ஊற வைக்க வேண்டும். அப்போது எண்ணெய் பிசுக்கு எல்லாம் காணாமல் போய் விடும். பின்னர் காட்டன் துணியால் நன்கு தேய்த்து காய வைக்க வேண்டும்.
கார்த்திகை தீபம் அன்று மாலை 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் விளக்கேற்றி விட வேண்டும். அதேபோல் புதிய விளக்குகளை குறைந்தது 4 மணி நேரம் ஒரு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட நீரில் போட வேண்டும். இதனால் விளக்குகளில் ஏற்றப்படும் எண்ணெய் கசியாமல் இருக்கும். விளக்குகளுக்கு சந்தனம், குங்குமம் வைக்காமல் விளக்கேற்றக்கூடாது. அதேபோல் திரி போடும் இடத்திலும் திலகமிட வேண்டும். முடிந்தால் அனைத்திற்கும் நெய், இல்லாவிட்டால் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.
விளக்குகளை அப்படியே தரையில் வைக்காமல் தட்டு, இலை போன்றவை மீது வைக்கலாம். இதனால் எண்ணெய் கசிவு தரையில் விழாமல் தடுக்கப்பட்டு விளக்கும் அழகாக காட்சியளிக்கும்.
இதெல்லாம் மறக்காதீங்க
பொதுவாக கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றினால் வாழ்க்கையில் நாம் நினைத்த காரியங்கள் எல்லாம் நடந்தேறும் என்பது நம்பிக்கையாகும். அதுமட்டுல்லாமல் திருக்கார்த்திகை அன்று அதிக எண்ணிக்கையிலான தீபமேற்றி வழிபட்டால் தீய சக்திகள் விலகும், லட்சுமி நம் வீட்டிற்குள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும். எனவே கடைசி நேரத்தில் போய் விளக்குகளை வாங்காமல் முன்கூட்டியே வாங்க வேண்டும். அப்போது சேதமடையாத விளக்குகளை பார்த்து தேர்வு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் பூ, இனிப்பு செய்ய தேவையான பொருட்கள், வாழையிலை, அவல் பொரி ஆகியவையும் வாங்கி வைக்க வேண்டும்.





















