Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Aippasi Annabishekam: ஐப்பசி அன்னாபிஷேகம் நாளில் பக்தர்கள் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Aippasi Annabishekam: அனைத்திற்கும் ஆதியாய் பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த மாதங்களில் ஐப்பசி மாதமும் ஒன்றாகும். குறிப்பாக, இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், இந்த ஐப்பசி பெளர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஐப்பசி அன்னாபிஷேகம்:
நடப்பாண்டிற்கான ஐப்பசி அன்னாபிஷேகத்தை நாளை நடக்கிறது. நாளை பெளர்ணமி என்பதால் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கும். அன்னசாதத்துடன் பாகற்காயை சேர்த்து சிவபெருமானுக்கு படைப்பார்கள்.
இந்த ஐப்பசி அன்னாபிஷேகம் நாளில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. இந்த நாள் அன்னாபிஷேக நாள் என்பதால் இந்த ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக நாளில் அரிசி, பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களை கடனாக வழங்கக்கூடாது. அதேபோல, இந்த பொருட்களை கடனாகவும் அடுத்தவர்களிடம் பெறக்கூடாது. இவ்வாறு செய்தால் அன்னபூரணி மற்றும் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது ஐதீகம்.
2. இந்த நன்னாளில் உணவை உதாசீனப்படுத்தவோ, வீணாக்கவோ கூடாது. பொதுவாகவே இப்படி செய்வது தவறாகும். சிவபெருமானுக்கு உகந்த நாளான ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இவ்வாறு செய்தால் தீராத வறுமையும், அன்னதோஷமும் உண்டாகும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இது மட்டுமின்றி சிவபெருமான் மற்றும் அன்னபூரணி கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.
3. ஐப்பசி பெளர்ணமி நாளின் மாலை நேரத்தில் நாம் குடியிருக்கும் வீடு முழுவதும் வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மகாலட்சுமி அம்சமாக இது கருதப்படுகிறது. சூரியன் மறைந்த பிறகும் வீட்டில் வெளிச்சம் இல்லாமல் இருப்பது அன்னலட்சுமி தங்காமல் தீய சக்திகள் மற்றும் வறுமை குடியேற காரணமாக மாறிவிடுகிறது என்றும் நம்பப்படுகிறது.
இதனால், நாளை இந்த தவறுகளை பக்தர்கள் செய்யாமல் இருக்க வேண்டும். ஐப்பசி பெளர்ணமி நாளில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறப்பாகும். இந்த நாளில் சிவபெருமானுக்கு படையலிட்ட அன்னத்தையும், பாகற்காயையும் பிரசாதமாக வழங்குவார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறும்.
ஐப்பசி அன்னாபிஷேகம் ஏன் சிறப்பு?
சிவ பெருமானுக்கு பல அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலே இந்த அன்னாபிஷேகம் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால், சிவபெருமான் தனது தலையில் தாங்கியிருக்கும் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் இந்த ஐப்பசி பெளர்ணமி நாளிலே பிரகாசிப்பதாக புராணங்கள் கூறுகிறது.
இதன் காரணமாக இந்த நன்னாளில் சிவபெருமானையும், அவரது சிரத்தில் குடியிருக்கும் சந்திரனையும் வணங்குவதால் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். மேலும், இந்த நன்னாளில் தான் சிவபெருமான் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.





















