Largest Iceberg A-76 | அண்டார்டிகாவில் இருந்து உடைபட்ட உலகின் மிகப்பெரிய பனிப்பாறை.. இனி என்னாகும்?
அண்டார்டிகாவில் அமைந்திருக்கும் ஒரு உறை நிலப்பகுதியை உடைத்திருக்கிறது உலகின் மிகப்பெரும் பனிப்பாறை.
அண்டார்டிகாவில் அமைந்துள்ள மேஜர்கா என்னும் நிலப்பகுதியுடன் இணைந்துள்ள உறைபனிப்பாறையை தகர்த்திருக்கிறது உலகின் மிகப்பெரும் பனிப்பாறை. விரலின் வடிவத்தில் அமைந்திருக்கும் இந்த பனிப்பறையின் நீளம் 4,320 கிலோமீட்டர். A 76 எனப் பெயரிப்பட்டிருக்கும் இந்த பனிப்பறையின் சேட்டிலைட் படங்கள் தற்போது உலகின் பார்வைக்கு தரப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி அளித்திருக்கும் தகவலின்படி, இந்தப் பனிப்பாறை ரோன்னே ஐஸ் ஷெல்ஃப் என்னும் நிலத்துடன் இணைந்த உறைபகுதியை வெட்டல் கடலுக்குள் உடைத்து தள்ளியிருக்கிறது.
இந்த குறிப்பிட்ட மாற்றத்துக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் தொடர்பில்லை எனச் சொல்லும் ப்ரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிபுணர் அலெக்ஸ், இது இயற்கையான ஒரு மாறுதல்தான் என குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, ஒரு சமீபத்திய க்ளேஷியல் அறிக்கையில் அன்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து தற்போதுவரை 6.4 ட்ரில்லியன் டன் பனிப்பாறைகள் உருகியுள்ளதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், இதனால் 17.8 மில்லிமீட்டர் அளவு கடல் மட்டத்தை உயர்த்தியுள்ளதையும் சுட்டிக்காட்டினர். 1990-களில் ஆண்டுக்கு 80 மில்லியன் பனிப்பாறைகள் உருகிவந்த நிலையில், 2010 பிற்பகுதியில் 475 பில்லியனாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பனிப்பாறைகள் உருகும் அளவு இன்னும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இதனால் 300 மில்லியன் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் எனக் கூறியுள்ளனர். 2100-ஆம் ஆண்டில் 200 மில்லியன் மக்கள் நிரந்தரமாக கடலோரத்தில் இருக்கும் குடியிருப்புகளைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது