கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!
கொரோனா பரவல் சர்வதேச அளவில் குறையாத சூழலில், கட்டுப்பாடுகளை பல நாடுகளும் தளர்த்துவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மிகவும் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முடங்கியது. இந்தியாவிலும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து, கடந்தாண்டு இறுதியில்தான் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. கொரோனா முதல் அலையின்போதே, இதன் தாக்கம் அடுத்தடுத்தும் தொடரும் என்று உலக சுகாதார அமைப்பும், சுகாதார நிபுணர்களும் எச்சரித்தனர்.
இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நாடுகள் அனைத்தும் மீண்டும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த முறை போல அல்லாமல் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் டெல்டா எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மட்டும் கொரோனா வைரசால் கடந்த மாதம் தினசரி 3 லட்சம் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு, தடுப்பூசிகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது போல, பிற நாடுகளில் ஆல்பா, பீட்டா என்று உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நாடுகள் கொரோனா வைரசால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்று பல நாடுகளும் மீண்டும் முடங்கியுள்ளது.
மேலும் படிக்க : ENG vs NZ Test: டிராவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் - இங்கிலாந்து vs நியூசிலாந்து!
கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த நாடுகளில், கடந்த சில தினங்களாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று முதல் பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாவது அலையின் ஆபத்து இருக்கும் இந்த சூழலில், அரசுகள் அதிகப்படியான தளர்வுகளை அளித்துள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது, டெல்டா வகை கொரோனா உள்பட கவலை அளிக்கக்கூடிய கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பின் இந்த எச்சரிக்கையால் பல நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.