`நிலாவின் மீது அணு ஆயுத தாக்குதல்!’ - அதிர்ச்சி தரும் அமெரிக்காவின் ஆய்வுத் திட்டம்!
விண்வெளி அச்சுறுத்தல் அடையாளம் காணும் மேம்பட்ட திட்டம் என்ற அமெரிக்க அரசின் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு அணு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளி அச்சுறுத்தல் அடையாளம் காணும் மேம்பட்ட திட்டம் என்ற அமெரிக்க அரசின் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குள் அணு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அரசின் விண்வெளி அச்சுறுத்தல் அடையாளம் காணும் மேம்பட்ட திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள், வான்வெளியில் நிகழும் விவரிக்கப்படாத நிகழ்வுகள் முதலானவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் பொது வெளியில் சமர்பிக்கப்படாதவை. மேலும், இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு வரை சுமார் 5 ஆண்டுகளுக்கு 22 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி இந்தத் திட்டத்தில் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்த தகவல்களைக் கடந்த 2017ஆம் ஆண்டு, டிசம்பர் 16 அன்று அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் அறிவித்தது அமெரிக்க அரசு.
பொது பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் ஆவணங்களுள் ஒன்றாக, நிலவின் மீது அணு ஆயுதம் வீசுவது குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவின் தரைப்பகுதிக்குக் கீழ் கிடைக்கும் `நெகட்டிவ் மேட்டர்’ என்று அழைக்கப்படும் முற்றிலும் எடை குறைந்த உலோகங்களை எடுக்கும் முயற்சியில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், உருகிய நிலையில் சூடாக இருக்கும் பூமியின் நடுப்பகுதியைப் போல சூரியன் மற்றும் பிற கிரகங்களில் இருப்பதால் அவற்றில் சுரங்கம் தோண்டாமல், நிலாவைப் போல இருக்கும் பகுதிகளில் சுரங்கப் பணி தொடங்குவது பயன்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் இருப்பதாலும், நிலவின் நடுப்பகுதியில் மேம்படுத்தப்பட்ட அணு சக்தி சுரங்கத் தொழில்நுட்பம் மூலமாக துளையிடுவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
பந்து வடிவில் இல்லாமல், சிலிண்டர் வடிவில் நிலவில் துளையிட்டால் சிதையும் கற்களின் அளவு கணக்கிடப்பட்டது. அதனைத் தொடந்து, அணு ஆயுத தாக்குதலின் மூலமாக கற்களைச் சிதற வைக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பில்லியன் கணக்கான ஆண்டுகளில் நிலவின் நடுப்பகுதியில் கூடுதல் அளவிலான நெகட்டிவ் மேட்டர் உலோகங்களில் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மேலும் இவை முற்றிலும் எடை குறைந்ததாகவும், பிற உலோகங்களை விட எடை குறைந்ததாகவும் இருக்கின்றன. ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், நிலவின் கிடைக்கும் டியூட்ரியம் என்ற உலோகம் தண்ணீரை விட சுமார் 1 லட்சம் மடங்கு கூடுதலான அடர்த்தி கொண்டது. இதன்மூலமாக நிலவின் நடுப்பகுதியில் இருக்கும் நெகட்டிவ் மேட்டர் இரும்பை விட சுமார் 1 லட்சம் மடங்கு எடை குறைந்ததாக இருக்கும்; அதே வேளையில் இரும்பின் ஆற்றல் கொண்டதாகவும் இருக்கும். இது விண்வெளி உபகரணங்கள் தயாரிப்பில் பெரிதும் உதவும் எனவும் கணக்கிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆய்வுகள் எதுவும் நிலவில் நேரடியாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.