நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு தாக்குதல்.. துருக்கியில் உச்சக்கட்ட பரபரப்பு.. பயங்கரவாதிகள் நாசசெயல்
துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே வெடிகுண்டு சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
துருக்கி நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு அருகே வெடிகுண்டு சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
துருக்கியை அலறவிட்ட பயங்கரவாத தாக்குதல்:
துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இதுகுறித்து கூறுகையில், "காலை 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது" என்றார்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சுமார் 9.30 மணியளவில், நமது உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு பொது இயக்குநரகத்தின் நுழைவு வாயில் முன் இலகுரக வர்த்தக வாகனத்துடன் வந்த 2 பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளில் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதியும் உயிரிழந்தார்.
வெடிகுண்டு தாக்குதலின்போது, எங்கள் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் லேசான காயம் அடைந்தனர். நமது மாவீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கடைசி பயங்கரவாதியை கொல்லும வரை எங்கள் போராட்டம் தொடரும்" என குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அதிகாரிகள், வெடிகுண்டை செயலிழக்க முயற்சி செய்து வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்தடுத்து இரண்டு தாக்குதலா?
வெடிகுண்டு சத்தத்தை தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக துருக்கி ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. கோடை விடுமுறையைத் தொடர்ந்து துருக்கி நாடாளுமன்றம் இன்றுதான் திறக்கப்பட உள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன் உரையுடன் நாடாளுமன்றக் கூட்டதொடர் தொடங்கப்பட உள்ளது.
🛑Ankara Kızılay'da İçişleri Bakanlığı Emniyet Genel Müdürlüğü önünde 2 terörist bombalı saldırı eylemi gerçekleştirdi.
— Anadolu Jurnal (@anadolujurnal) October 1, 2023
Teröristlerden biri kendisini patlatırken diğeri çatışmada etkisi hale getirildi. İki emniyet mensubu da yaralandı.#SONDAKİKA #pazar #patlama TBMM pic.twitter.com/z3uLAQQYQL
இதை பயங்கரவாத தாக்குதல் என துருக்கி அரசு அறிவித்துள்ள நிலையில், அங்காராவின் தலைமை வழக்கறிஞர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த குறிப்பிட்ட தீவிரவாத குழுவும் இருப்பதாக துருக்கிய அதிகாரிகள் அடையாளம் காணவில்லை.
கடந்த காலங்களில், துருக்கியின் பல்வேறு பகுதிகளில் குர்திஷ் தீவிரவாத அமைப்புகளும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளும் தாக்குதலை நடத்தி வந்துள்ளது. அங்காரா நகருக்கு செல்லும் அனைத்து பாதையையும் நகர காவல்துறை முடக்கியுள்ளது.