World Corona: கொரோனா வைரஸ் நுழையாத 5 உலக நாடுகள் எது தெரியுமா?
உலகத்தில் பல்வேறு நாடுகள் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்ற சூழலில் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் நுழையவே இல்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. அதேபோல் உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இன்னும் வைரஸ் பாதிப்பு இருந்து கொண்டு தான் வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பு சில நாடுகள் சந்திக்கவே இல்லை என்றால் நம்புவீர்களா? நம்புங்கள், அப்படி பட்ட நாடுகளும் உள்ளன. அந்த நாடுகளை எவை? அது எங்கே இருக்கிறது?
கொரோனா வைரஸ் பாதிப்பு நுழையாத டாப் 5 நாடுகள் அனைத்தும் தீவுகளாக உள்ளன. அவை
அமெரிக்கன் சமோவா:
தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவுகள் தான் அமெரிக்கன் சமோவா. இது அமெரிக்க நாட்டின் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த தீவுகளின் மொத்த மக்கள் தொகை 55 ஆயிரம் தான். இந்த தீவுகளுக்கு விமானம் கூட செல்ல முடியாது. அதனால் தான் என்னவோ கொரோனா வைரஸூம் இந்த தீவுகளுக்கு செல்லவே இல்லை.
குக் தீவுகள்:
நியூசிலாந்து நாட்டிலிருந்து 2000 மையில் தொலைவில் தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள நாடு குக் தீவுகள். இதில் 15 தீவுகள் உள்ளன. இவை நியூசிலாந்து நாட்டுடன் தொடர்பு உடைய தீவுகள். இந்த நாட்டில் தீவிர கட்டுப்பாடு மற்றும் தனிமை படுத்தல் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் காத்து கொள்ளப்பட்டு வருகிறது.
மைக்ரோனேஷியா:
மைக்ரோனேஷியா 600 சிறிய தீவுகளை கொண்டது. இவை நான்கு நாடுகளை சுற்றி தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இந்த நாட்டில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு எதுவும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. இந்த நாட்டிற்கு அமெரிக்கா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகள் உதவி செய்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கிரிபதி:
ஹவாய் தீவுகளிலிருந்து தென்மேற்கு பகுதியில் 2000 மையில் தொலைவில் அமைந்துள்ள நாடு கிரிபதி. இங்கு பவள பாறைகள் அதிகம் இருக்கும். முதலில் இந்த நாடு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தடை விதித்தது. அதன்பின்னர் ஒரு சில நாடுகளிலிருந்து மட்டுமே நபர்கள் வர அனுமதி அளித்தது. இதன் காரணமாக இந்த நாட்டில் ஒரு கொரோனா தொற்று கூட பதிவாக வில்லை.
நௌரு:
கிரிபதியின் அண்டை நாடுகளில் ஒன்று நௌரு. இது உலகிலேயே பரப்பளவில் மூன்றாவது சிறிய நாடு. இதன் மொத்த பரப்பளவு வெறும் 8 சதுர மையில் தான். இங்கு மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை வெறும் 10 ஆயிரம் தான். உலகளிலேயே இரண்டாவது குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு நௌரு தான். இங்கு பயண கட்டுபாடுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த 5நாடுகளுக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவை அனைத்தும் தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளன. இவை தவிர நியூவ், டோங்கா,துவாலு, செயிண்ட் ஹெலினா, பலாவ் போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாக வில்லை. பெரிய நாடுகள் என்று பார்த்தால் வடகொரியா மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பதிவாகவில்லை என அந்த நாடுகள் தெரிவிக்கின்றன. எனினும் உலக சுகாதார மையம் வடகொரியாவின் தகவலை ஏற்க மறுத்துள்ளது.