Dangerous Roads | கரணம் தப்பினால் மரணம்.. உலகின் டாப் 10 ஆபத்தான சாலைகள்
உலகின் ஆபத்து நிறைந்த சாலைகளாக பல்வேறு சாலைகள் இருந்தாலும் இந்த 10 சாலைகளில் ஆபத்தை உணர்ந்தும் மக்கள் பயணித்து வருவது உற்றுநோக்க வேண்டியதாக உள்ளது
அட்லாண்டிக் ஓஷன் ரோட்- நார்வே
இயற்கையை ரசித்துக் கொண்டே வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு நார்வே நாட்டில் உள்ள 35 கிலோ மீட்டர் நீள அட்லாண்டிக் ஓஷன் ரோட் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இந்த சாலையில் பயணிக்கும் போது ரோலர் கோஸ்டரில் செல்லும் அனுபவம் கிடைக்கும் காரணம் அந்த அளவிற்கு வளைந்தும் நெளிந்தும் சாய்ந்தும் செங்குத்தாகவும் இருக்கும் ஆபத்தான சாலையாக இந்த சாலை இருக்கிறது. நேரான சாலை என்பதே தென்படாத இந்த சாலையை அமைக்கும் பணிகள் 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் முழு பணிகளும் முடிவுற 6 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த சாலைகளின் இடையே 8 பாலங்களும் இருக்கின்றன. கடல் சீற்றம் இருந்தால் கடல் அலைகள் வாகனத்தின் மீது விழவும் வாய்ப்பு உள்ளது
யூங்கல்ஸ் ரோடு, பொலிவியா
60 கிலோ மீட்டர் நீள சைக்கிள் செல்லும் பாதையாக உள்ள இந்த சாலை 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்த சாலைக்கு மரணச்சாலை என்று மற்றொரு பெயரும் உள்ளது. அதற்கு ஏற்றார்போல் இந்த சாலையில் இருந்து ஆண்டுக்கு 300 பேர் தவறி விழுந்து உயிழந்துள்ளனர். இந்த சாலை மிகவும் செங்குத்தானதாகவும் அகலம் வெறும் 10 அடிக்கும் குறைவாக உள்ளதால் உயிரை பணயம் வைத்து வாகனம் ஓட்டும் கட்டாயம் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால் நிலச்சரிவும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. 1998ஆம் ஆண்டில் இருந்து 18 சைக்கிள் பயணிகள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
ஹானா, ஹவாய்
ஹைவே 36 என்ற சாலை 600 வளைவுகளையும் 51 ஒற்றை அடி பாலத்தையும் கொண்டுள்ளது. ஹவாயின் இயற்கை அழகை ரசிப்பதற்காக உயிரை பணயம் வைத்து இந்த சாலையில் பலர் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சாலையில் எப்போது வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
டால்டன் ஹைவே, அமெரிக்கா
அலாஸ்காவில் உள்ள டால்டன் ஹைவே 666 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்த அலாஸ்காவில் இருப்பதால் இந்த சாலையில் மக்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியாது. இந்த 666 கிலோ மீட்டர் சாலையில் வெறும் 3 கிராமங்கள் மட்டுமே உள்ளதால் உங்கள் வாகனம் பழுந்தானால் உடனடி உதவி கிடைப்பது கடினம், உதவிக்காக சில நாட்களோ சில வாரங்களோ கூட காத்திருக்கும் சூழல் ஏற்படலாம். அமெரிக்காவிலேயே அதிகம் பனிப்பொழிவு உள்ள பகுதியாக அலாஸ்கா உள்ளதால் இச்சாலையில் பயணிப்பது கடினமான ஒன்றாக உள்ளது.
காராக்குரம் ஹைவே- சீனா- பாகிஸ்தான்
உயர்ந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் சாலையாக காராக்குரம் நெடுஞ்சாலை உள்ளது. இயற்கையாகவே மலைப்பாதையான இந்த சாலை மிகவும் ஆபத்தானது. இதனால் பனிமூட்டம், பனிப்புயல் மற்றும் மலையில் இருந்து வெள்ளமோ வருவதற்கான ஆபத்துகளும் உள்ளது. மேலும் இந்த சாலையில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரம் என்பதால் ஓட்டுநர்களுக்கு மூச்சுத்திணறலும் தொடர் வாந்தியும் ஏற்படும்
கு லியாங் டனல்
சீனாவில் உள்ள டாய்ஹாங் மலைப்பிரதேசத்தில் உள்ள சாலைதான் இது. இந்த சாலையின் அகலம் 13 அடி, உயரம் 16 அடி. மலைவாழ் மக்கள் 13 பேர் மட்டுமே சேர்ந்து இந்த பாதையை உருவாக்கி உள்ளனர். ஒன்றேகால் கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த பாதையை தினமும் மூன்று அடிக்கு செதுக்கி இந்த பாதையை உண்டாக்கி உள்ளனர்.
ஸ்கிப்பர்ஸ் கேன்யான் சாலை, நியூசிலாந்து
குறுகிய பாதை கொண்ட 25 கிலோ மீட்டர் நீள சாலையில் ஒரு வாகனம் மட்டுமே பயணிக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு வாகனம் எதிரெதிரே வந்தால் வழிவிடுவது மிகக்கடினம். இடம் கிடைக்கும் வரை ரிவேர்ஸ் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். தங்க சுரங்கத்திற்காக புகழ்ப்பெற்ற இப்பகுதியாக இப்பகுதி உள்ளது.
பசாஜ் டீ குவைஸ், பிரான்ஸ்
4.5 கிலோ மீட்டர் சாலை பிரஞ்ச்சையும் லாயர் மவுண்ட் தீவையும் இணைக்க கட்டப்பட்டது. பார்ப்பதற்கு நல்ல சாலை போல் காட்சி அளித்தாலும், கடல்நீர் இந்த சாலையை மூழ்கடிக்கும் என்பதால் இச்சாலையில் பயணிப்பது மிகக்கடினம். குறைவான அலை இருக்கும்போது மட்டுமே இந்த சாலையில் பயணிக்க முடியும், அலையின் வீச்சு அதிகமாக இருக்கும் நேரத்தில் வாகனத்தை இயக்கினால் அலைகள் வாகனத்தை மூழ்கடிக்க வாய்ப்புள்ளது. எப்போது ஈரத்துடனேயே இந்த சாலை இருப்பதால் இச்சாலையில் வாகனத்தை கட்டுப்படுத்து கடினமானதாக உள்ளது.
ஜோஜிலா, லடாக், இந்தியா
லடாக்கில் உள்ள இமயமலையில் மிக உயரமான மலைப்பாதையாக ஜோஜிலா சாலை உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இச்சாலை அப்பகுதியில் இரண்டாவது உயரமான மலைப்பாதையாகும். 11,575 அடி உயரமுள்ள இச்சாலையில் குளிர்காலத்தில் இரண்டு பக்கமும் அடர்த்தியான பனிச்சுவர்களுக்கு மத்தியில் வாகனம் ஓட்டுவது மிகச்சிரமம்
தி ஹைலேண்ட் கவுண்டி பாலம், வாஷிங்டன், அமெரிக்கா
இந்த பாலத்தில் பாதுகாப்பு உபகரணங்களே இல்லை, பாலத்தை தாண்டி சாலைக்கு சென்றாலும் ஏற்ற இறக்கம் நிறைந்த சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த சாலையில் சிறிது கவனம் சிதறினாலும் பங்கர ஆபத்தை சந்திக்க வேண்டிய நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும்