Lay Offs: நிம்மதியை கெடுக்கும் லே ஆஃப்; 3 லட்சம் ஊழியர்கள் இதுவரை வேலையிழப்பு - என்னதான் நடக்கிறது?
சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
பணிநீக்கம்:
பொருளாதார மந்த நிலை காரணமாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்துள்ளது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டமாக மேற்கொண்டு வருகிறது.
நேற்று, முன்தினம் வெளியான அறிவிப்பின்படி சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தது. அதேபோல, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
ஆட்குறைப்பு:
கடந்த ஜுன் மாத விவரங்களின்படி, வாஷிங்டனை மையாமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில், உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சரிவில் உள்ளதன் காரணமாக, அதன் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சந்தையில் தனது கிளை க்ளவுட் நிறுவனமான அசூர்-ன் வளர்ச்சியை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது. இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவினங்களை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி நீக்கம்:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன.
அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இவர்களில் பல பேர் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிநீக்கம் காரணமாக ஊழியர்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.கடந்தாண்டு மட்டும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட 60 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Massive layoffs are hitting the biggest tech companies. Over FIFTY THOUSAND lost jobs in just last few months. FIFTY THOUSAND! We are yet to see the full repercussions of this tsunami. pic.twitter.com/1Wf5CNIdtq
— Rebecca Enonchong, FREng (@africatechie) January 20, 2023
மேலும், கடந்தாண்டு முதல் நடைபெற்று வரும் இந்த பணியாளர்கள் வேலை நீக்கத்தினால் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களிலும் சேர்த்து இதுவரை 3 லட்சம் பேர் வரை வேலையை இழந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.