தலிபான் ஆட்சியமைப்பது அடுத்தவாரம் ஒத்திவைப்பு: அனைவரின் ஆதரவை பெற பேச்சுவார்த்தை!
”நாங்கள் அனைத்து கட்சிகள், இனக்குழுக்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தைக் அளித்து ஆட்சி செய்ய விரும்புகிறோம்” -தலிபான்
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த சில வாரங்களாக திரும்பப்பெறப்பட்டு வந்ததை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களாக தலிபான், தங்கள் வசம் கொண்டு வந்து கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி தலைநகர் காபூலையும் கைப்பற்றியது. அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி நடத்தி வந்த அதிபர் அஷ்ரப் கனியை விரட்டி விட்டு மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய காட்சியை இவ்வுலகமே கண்டிருக்கும். இதனை தொடர்ந்து தங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பது குறித்தும் தலிபான்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்தனர்.
தற்போது முழு அரசு கட்டமைப்புடன் ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தலிபான் அமைப்பின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் ஆட்சி இன்று ஆட்சி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் நிறுவனர் முல்லா உமரின் மகன் முல்லா யாக்கூபுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்த தாலிபான்கள் காபூலில் ஒன்று கூடியுள்ளனர்.
இந்த நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் பணியை அடுத்த வாரம் தள்ளிவைப்பதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் 2-வது முறையாக புதிய அரசாங்கம் அமைப்பதை தாலிபான்கள் ஒத்திவைத்து இருக்கின்றனர். இதுகுறித்து தெரிவித்த முஜாஹித் "புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்" என்றார்.
ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுதற்காக, பல்வேறு கட்சிகள், இனக்குழுவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தலிபான்களின் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர், கலீல் ஹக்கானி, காபூலில் பல்வேறு குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அப்போது கலீல் ஹக்கானி பேசுகைய "தலிபான்களால் தங்களுக்கென ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும், ஆனால் நாங்கள் அனைத்து கட்சிகள், இனக் குழுக்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தைக் அளித்து ஆட்சி செய்ய விரும்புகிறோம். ஆனால், தாலிபான்களை மட்டும் இந்த உலகம்
ஏற்றுக்கொள்ளாது.” என்றார்.
இந்த நிலையில் தலிபான்களால் விரட்டப்பட்டு துபாயில் தஞ்சம் அடைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் சகோதரரும், ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமரும் ஜாமியத் இ இஸ்லாமி ஆப்கானிஸ்தான் அமைப்பின் தலைவருமான குல்புதீன் ஹக்மத்யார் தலிபான் தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவருக்கு ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என தாலிபான் அமைப்பும் உறுதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.